ADVERTISEMENT

துபாயில் திடீரென சாய்ந்த அடுக்குமாடி கட்டிடம்.. அவசரமாக வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள்.. கட்டிடத்திற்கும் சீல் வைப்பு..

Published: 22 Apr 2024, 6:38 PM |
Updated: 22 Apr 2024, 6:39 PM |
Posted By: admin

துபாயின் முஹைஸ்னா 4 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் கட்டமைப்பில் திடீரென சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் வசித்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சிவில் பாதுகாப்பு மற்றும் பல அரசாங்க அதிகாரிகள் அந்த கட்டிடத்தை முழுவதுமாக சீல் வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த வெள்ளிக்கிழமை இரவு (ஏப்ரல் 19) அந்த கட்டிடத்தில் குடியிருப்பாளர்கள் இருந்தபோது திடீரென நிலநடுக்கம் போன்ற ஒரு அதிர்வு ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். கட்டிடம் சீல் வைக்கப்பட்டதால் குடியிருப்பாளர்களில் சிலர் கட்டிடத்திற்கு வெளியே தங்கள் கார்களிலும், மற்றவர்கள் ஹோட்டல்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் அன்றைய இரவுப் பொழுதைக் கழித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அந்த கட்டிடத்தில் வசிக்கும் நவல் (Nawal) என்பவர் விவரிக்கையில், இரவு நேரத்தில் கட்டிடத்தில் நிலநடுக்கம் போன்ற லேசான அதிர்ச்சியை உணர்ந்ததாகவும், சில மணி நேரம் கழித்து, துபாய் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் அவரது அறையின் கதவைத் தட்டி, உடனடியாக கட்டிடத்தை காலி செய்யும்படி கேட்டுக் கொண்ட பின்னரே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

கட்டிடத்தின் ஒரு பக்கம் சேதம் அடைந்ததால், கட்டமைப்பில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் ஒரு பக்கமாக சற்று சாய்ந்ததாகக் கூறிய அவர், உடனடியாக பிள்ளைகளை எழுப்பி லிஃப்ட் இயங்காததால், படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த  நேரத்தில், கட்டிட உரிமையாளர் உட்பட  கட்டிட சர்வேயர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலரும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே காத்திருந்த அவரது குடும்பத்தினரை அல் குசைஸில் உள்ள ஹோட்டல் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

நாட்டில் சமீபத்தில் பெய்த கனமழையால் கட்டிடத்தின் அடித்தளம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், ஐந்து நாட்களுக்குப் பிறகும் அடித்தளத்தில் கார்கள் மூழ்கிய நிலையில் நிற்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த போது ஷாப்பிங் மாலில் இருந்ததாக கூறும், பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் லட்சுமி என்கிற குடியிருப்பாளர், 9வது மாடியிலுள்ள அவர்களது உடைமைகளை மீட்க காவல்துறை அனுமதிக்கும் வரை பல மணி நேரம் காத்திருந்து, பின்னர் காலை 6 மணிக்கு தான் உடைமைகளை எடுக்க காவல்துறையினர் கட்டிடத்திற்குள் அனுமதித்ததாக கூறியுள்ளார்.

மேலும், அதிர்ஷ்டவசமாக எங்கள் கார் பேஸ்மென்ட் 1 இல் நிறுத்தப்பட்டதால் அதை மீட்டெடுக்க நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். பேஸ்மென்ட் 2 இல் பார்க்கிங் செய்திருந்தவர்கள் தங்கள் கார்களை வெளியே எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறிய அவர், பர் துபாயில் உள்ள அவர்களின் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்ததாகவும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே, கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறும் அக்கட்டிடத்தில் வசித்த குடியிருப்பாளர்களுக்கு, இந்த சம்பவம் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel