அமீரக செய்திகள்

துபாய்: RTAவின் ‘பஸ் ஆன் டிமாண்ட்’ சேவை பிசினஸ் பே வரையிலும் நீட்டிப்பு.. சேவையை பெறுவது எப்படி.?

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அதன் ‘பஸ் ஆன் டிமாண்ட்’ சேவையை பிசினஸ் பே வரை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், இது வெற்றிகரமான ஒரு மாத சோதனை ஓட்டத்தைத் தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விரிவாக்கமானது, அமீரகத்தில் உள்ள பல கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் வணிகங்களுக்கான மையமாக விளங்கும் பிசினஸ் பேயில் போக்குவரத்து வசதிக்கான வளர்ந்து வரும் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் RTA எடுத்து வரும் முயற்சியின் கீழ் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து RTAவின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷக்ரி கூறுகையில், வெகுஜன போக்குவரத்து நெட்வொர்க்கை மேம்படுத்தும் நோக்கிலும், முக்கிய பகுதிகளில் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்திலும் பிசினஸ் பே வரை ‘பஸ் ஆன் டிமாண்ட்’ சேவையை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளார்.

RTAவின் பஸ் ஆன் டிமாண்ட் சேவைக்கு துபாயில் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறியதுடன், தற்போதைய புதிய விரிவாக்கமானது நகரின் முக்கிய இடங்களை உள்ளடக்கி மெட்ரோ மற்றும் டிராம் நிலையம் வழியாக செல்வதால், இது பயணிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் இடங்களுக்கு பயணிக்க அனுமதிக்கும் என்றும் ஷக்ரி கூறியுள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், ஸ்மார்ட் ரெஸ்பான்ஸ் சிஸ்டத்தில் இயங்கும் இந்த சேவையானது, பயனரின் தேவைக்கேற்ப பேருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், பயணிகள் தங்கள் பயணத்தை தொடக்கத்தில் இருந்து முடிவு வரை குறிப்பிடவும், அதற்கேற்ப பொருந்தக்கூடிய கட்டணத்தை செலுத்தவும் உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சேவையானது வாடிக்கையாளர்களின் குடியிருப்பு பகுதிகளை அருகிலுள்ள வெகுஜன போக்குவரத்து நிலையங்களுடன் இணைப்பதாக குறிப்பிட்ட ஷக்ரி, ஸ்மார்ட் ஆப் மூலம் பல்வேறு பகுதிகளை இணைக்கும் மினி பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்தி இந்த சேவை செயல்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

பேருந்து சேவையை பெறுவது எப்படி??

RTAவின் இந்த மினி பேருந்து சேவையை பெற விரும்பும் பயணிகள் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் இரண்டிலும் கிடைக்கும் துபாய் பஸ் ஆன் டிமாண்ட் செயலியின் மூலம் இந்த சேவையை அணுகலாம். மேலும் இந்த சேவையின் கீழ் இயக்கப்படும் மினி பேருந்தில் 14 இருக்கைககள் இருக்கும்.

அத்துடன், பேருந்துகளின் ஓட்டுநர்கள் ஆப்ஸ் மூலம் சேவைக் கோரிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளவும் முடியும். இதனால், அல் பர்ஷா, அல் நஹ்தா, துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் மற்றும் பிசினஸ் பே ஆகிய பகுதிகளில் உள்ள பயனிகள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள இடத்தை எளிதாக அடைய முடியும்.

துபாயில் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்க தற்போது பிஸினஸ் பே வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ‘பஸ் ஆன் டிமாண்ட்’ சேவையை, இந்தாண்டின் இறுதியில் எமிரேட்டின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த RTA திட்டமிட்டுள்ளதும் குறிப்பிட்டத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!