ADVERTISEMENT

பயணிகளுக்காக போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் ஷார்ஜா… ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு நடவடிக்கை…

Published: 6 Apr 2024, 4:25 PM |
Updated: 6 Apr 2024, 4:31 PM |
Posted By: admin

அமீரகத்தில் வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை முன்னிட்டு வாகனங்களுக்கு இலவச பார்க்கிங், போக்குவரத்து மாற்றம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே துபாய், அபுதாபி, ஷார்ஜா எமிரேட்டுகள் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்திருக்கின்றன.

ADVERTISEMENT

அதன் வரிசையில் ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை முன்னிட்டு அதன் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. ஆகவே, ஷார்ஜா எமிரேட்டில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு இந்த விடுமுறை காலத்தின் போது அடிக்கடி பேருந்து சேவை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து SRTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஏப்ரல் 9 முதல் 12 வரை, மொத்தம் 789 இன்டர்சிட்டி பேருந்துகள் பயணிகளுக்கு சேவை செய்யும் என்றும், இதன் மூலம் தினசரி பயணங்களின் எண்ணிக்கை 6,330 ஆக அதிகரிக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல், ஈத் காலத்தில் மக்களுக்கு பாதுகாப்பான, வசதியான அனுபவத்தை உறுதி செய்வதற்காக அனைத்து வழித்தடங்களுக்கும் ஜுபைல் நிலையத்தில் இருந்து இன்டர்சிட்டி பயணிகள் சேவையானது அதிகாலை 3.45 முதல் நள்ளிரவு 12.30 வரை இயங்கும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.

கூடுதலாக, ஷார்ஜா மற்றும் மஸ்கட் இடையே ஒரு நாளைக்கு இரண்டு முறை என பயணிகளுக்கு ரூட் 203 பேருந்து சேவை ஒதுக்கப்பட்டுள்ளது. முதலாவது காலை 6.30 மணிக்கும் இரண்டாவது மாலை 4 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அம்மான் டெலிகாம் தளம் மூலமாகவோ அல்லது ஜுபைல் பேருந்து நிலையத்தில் உள்ள அவுட்லெட் மூலமாகவோ இதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

எல்லாவற்றிற்கும் மேலாக, ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டி விடுமுறை நாட்களில் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காகவும் முக்கிய இடங்களை கண்காணிக்கவும் 43 குழுக்களை நியமித்துள்ளது. முக்கியமாக, பூங்காக்கள், கடற்கரைகள், உணவகங்கள், பேக்கரிகள், சலூன்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் போன்ற பிரபலமான இடங்கள் வழியாக ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் மீறல்களைக் கண்டறிந்தால் 993 என்ற எண்ணில் 24/7 ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளுமாறு உள்ளூர் குடிமை அமைப்பு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel