அமீரக செய்திகள்

அமீரகத்தில் நாளை ஷவ்வால் பிறையை பார்க்க குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு.. பிறை தென்பட்டால் நாளை மறுநாள் பெருநாள்..!!

ஐக்கிய அரபு அமீரக அரசானது நாளை ஏப்ரல் 8ம் தேதி, திங்கள்கிழமை (ரமலான் 29) மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின்பு ரமலான் மாத்த்தின் முடிவைக் குறிக்கும் ஷவ்வால் மாத பிறையைப் பார்க்குமாறு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளிலும், அதே போன்று பெரும்பாலான அரபு மற்றும் முஸ்லீம் நாடுகளிலும் புனித ரமலான் மாதம் கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கியது. பொதுவாக பிறை பார்ப்பதை பொறுத்து இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும்.

அதன்படி, இந்த வருடம் ரமலான் மாதத்தின் 29ம் நாள் நாளை ஏப்ரல் 8 திங்கள்கிழமை வருகிறது. எனவே, நாளை இரவில் பிறை காணப்பட்டால், அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 9 ம் தேதி செவ்வாய்க்கிழமை ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளாகும்.

ஒருவேளை நாளை பிறை தென்படவில்லை என்றால், ஏப்ரல் 10ம் தேதி புதன்கிழமை ஈத் அல் ஃபிதர்ரின் முதல் நாளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வானியல் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு ரமலான் 30 நாட்கள் நீடிக்கும் என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் அமீரகத்தில் வசிக்கும் ஊழியர்களுக்கு ஈத் அல் ஃபித்ருக்கான விடுமுறை ஏற்கெனவே துவங்கிவிட்டது. இது ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நீடிப்பதை பொறுத்து மாறுபடும். அதாவது அமீரகத்தின் தனியார் துறை ஊழியர்களுக்கு ரமலான் நோன்பு 29 நாட்களுடன் நிறைவைடைந்தால் சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை சேர்த்து, ஏப்ரல் 6 ம் தேதி முதல் ஏப்ரல் 11 (வியாழக்கிழமை) வரை என ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

அதுவே, ரமலான் நோன்பு 30 நாட்களாக நீடித்தால், ஏப்ரல் 6ம் தேதி (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் 14ம் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை என ஒன்பது நாட்கள் மிக நீண்ட விடுமுறை நாட்களை அமீரக குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம். இருப்பினும் சனி அல்லது ஞாயிறு வேலை நாட்கள் உள்ளவர்களுக்கு இந்த விடுமுறை நாட்கள் குறையும்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தைப் போன்று சவூதி அரேபியாவும் நாளை இரவு பிறையை பார்க்குமாறு தங்கள் நாட்டு குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!