அமீரக செய்திகள்

UAE: இந்திய மருத்துவரின் மனிதாபிமான செயல்.. பின்தங்கிய 50 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லுலு குழுமத்தின் (lulu group) தலைவரும், மிகப்பெரிய இந்திய தொழிலதிபருமான யூசுப் அலி M.A அவர்கள் அமீரகத்தில் சுமார் ஐம்பது வருடங்களாக ஆற்றி வரும் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், தொண்டு முயற்சி ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீரகத்தில் தொடங்கப்பட்டது.

அதாவது, ‘கோல்டன் ஹார்ட்’ எனும் பெயரில் 2024, ஜனவரி 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொண்டு முயற்சியின் கீழ், இதய நோய்களுடன் பிறந்த பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கு இலவச உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்று யூசுப் அலி அவர்களின் மருமகனும், நாட்டின் மிகப்பெரிய சுகாதாரக் குழுமத்தின் (VPS Healthcare) தலைவருமான Dr.ஷம்சீர் வயலில் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் கீழ், தற்போது விதிவிலக்கான எல்லை தாண்டிய ஒத்துழைப்புடன் இந்தியா, துனிசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இரண்டு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக VPS குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த தொண்டு முயற்சியின் மருத்துவ மதிப்பீட்டு வாரியத்திற்கு தலைமை தாங்கிய புகழ்பெற்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தாரிக் அலி எல்ஹாசன் (Dr Tarig Ali Elhassan) கூறுகையில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து எங்களுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், நாங்கள் பெற்ற ஒவ்வொரு மருத்துவப் பதிவையும் முழுமையாக மதிப்பாய்வு செய்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையின் தீவிரம் மற்றும் முன்முயற்சியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை பட்டியலிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர், அறுவை சிகிச்சை செய்ய உலகளாவிய அறுவை சிகிச்சை நிபுணர்களை ஒன்று சேர்த்து, போக்குவரத்து சவால்களை எளிதாக்கி மூன்று மாதங்களுக்குள் எங்களின் இலக்கை வெற்றிகரமாக முடித்ததாகவும், மேலும் இதனை ஒரு பெரிய சாதனையாக நாங்கள் கருதுகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த தொண்டு முயற்சியின் கீழ் பயனடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், தங்களின் குழந்தைகளுக்கு மருத்துவ கட்டணம் எதுவுமின்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்ததாகவும், சரியான நேரத்தில் உதவியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

மேலும், இந்த தொண்டு முயற்சியின் கீழ் சிறு குழந்தைகளைக் குணப்படுத்தும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு VPS குழுமத்தின் தலைவரான Dr. ஷம்சீர் வயலில் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!