துபாயில் உள்ள ஒரு பள்ளியில் பெண் ஆசிரியர் ஒருவரை அனுமதியின்றி புகைப்படம் எடுத்து அதனை சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த குற்றத்திற்காக, அதே பள்ளியில் பணிபுரியும் ஊழியருக்கு 2000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்ட வினோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஒரு தனியார் பள்ளியில் வகுப்புகளுக்கு இடையேயான இடைவேளையின் போது, ஆசிரியர் ஒருவர் ஓய்வறையில் தூங்கியுள்ளார். அதனை பார்த்த மற்றொரு பெண் ஊழியர் மொபைலில் புகைப்படம் எடுத்து பொதுவெளியில் வெளியிட்ட குற்றத்திற்காக அந்த ஊழியரை கண்டித்ததுடன், அபராதமும் விதித்து துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக வெளியான தகவல்களின் படி, குற்றம் சாட்டப்பட்டவர் பள்ளியில் அட்மின் நிர்வாகியாக பணிபுரிபவர் என்பதும், ஆசிரியருக்குத் தெரியாமல் மொபைல் போனைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்ததுடன் அதை பள்ளி நிர்வாகத்துக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, படத்தில் ஆசிரியரின் முகம் தெளிவாகத் தெரியும் நிலையில் புகைப்படம் இருந்ததால், தனது தனியுரிமையை மீறியதாக பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் அந்த ஊழியர் மீது புகார் அளித்துள்ளார். அதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி மற்றும் அபராதம்
இந்த வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட ஆசிரியை அளித்த புகாரின் அடிப்படையில், தனியுரிமையை மீறிய குற்றத்திற்காக பெண் பள்ளி ஊழியரை குற்றவாளி என்று தீர்ப்பளித்ததுடன் 2,000 திர்ஹம் அபராதமும் விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றவர்களின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களை எடுப்பதும் அவற்றை பகிர்வதும் சட்ட விரோதமாகும். ஒருவரின் தனியுரிமையை மீறும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டால் ஆறு மாத சிறைத்தண்டனையுடன், அதிகபட்சமாக 500,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel