இஸ்லாமியர்களின் புனித பண்டிகை நாட்களில் ஒன்றான தியாகத் திருநாள் என அழைக்கப்படும் ஈத் அல் அதா பண்டிகையானது, இன்னும் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இறைத்தூதர்களில் ஒருவரான இபுராஹிம் நபி அவர்கள், இறைவனுக்காக செய்த தியாகத்தை போற்றும் வகையில் உலகெங்கிலும் இருக்கும் முஸ்லிம்களால் இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான துல் ஹஜ் மாதத்தின் 10வது நாளில் இந்த தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் வரவிருக்கும் இந்த ஈத் அல் அதா எனும் ஹஜ் பெருநாள் தொடங்கும் முதல் தேதியை எகிப்தின் வானிலை மையம் கணித்துள்ளது. எகிப்திய வானியல் கழகத்தின் கூற்றுப்படி, ஜூன் 7, வெள்ளிக்கிழமை, தற்போதைய ஹிஜ்ரி ஆண்டு 1445க்கான துல் ஹஜ் மாதத்தின் தொடக்க நாளாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வானியல் கணக்கீடுகளின்படி, ஈத் அல் அதா பண்டிகையின் முதல் நாள் ஜூன் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, எகிப்தில் உள்ள வானியல் மற்றும் புவி இயற்பியல் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் தலைவர் டாக்டர் தாஹா ரபேஹ் என்பவர் கூறுகையில், அரேபிய மாதமான துல் ஹஜ் மாதம் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவு கெய்ரோ நேரப்படி ஜூன் 6ம் தேதி வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2:39 மணிக்கு பிறக்கும் என்று தனது அறிக்கையில் விவரித்துள்ளார்.
மேலும், இந்த பிறையானது மக்காவின் வானத்தில் 11 நிமிடங்களுக்கும், கெய்ரோவில் சூரிய மறைவிற்குப் பிறகு 18 நிமிடங்களுக்கும் தெரியும் என்றும், எகிப்தின் பல்வேறு கவர்னரேட்டுகளில் சூரிய மறைவிற்குப் பிறகு 12 முதல் 20 நிமிடங்கள் வரை பிறை தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர மற்ற அரபு நாடுகளின் வானங்களில் சூரிய மறைவிற்குப் பிறகு 1 முதல் 28 நிமிடங்கள் வரை புதிய பிறை தெரியும் என்றும் டாக்டர் ரபே சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், கோலாலம்பூர் மற்றும் ஜகார்த்தாவில், பிறை சூரிய மறைவிற்கு 9 மற்றும் 14 நிமிடங்களுக்கு முன்பே மறையும் என்பதால், இந்த இடங்களில் பிறை கண்ணிற்கு தெரிய வாய்ப்பில்லை எனவும் அவர் கணித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel