குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் ‘விசா-ஆன்-அரைவல் (visa on arrival)’ வசதியை வழங்கி வரும் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இந்த விசாவை வழங்கி வருகிறது. அதாவது, இந்திய பாஸ்போர்ட்டில் அமெரிக்க கிரீன் கார்டு அல்லது UK அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளில் குடியிருப்பு விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு 14 நாட்கள் செல்லுபடியாகும் ஆன் அரைவல் விசாவை அமீரகம் வழங்கி வந்தது.
இந்நிலையில், இந்தியர்களுக்கு வழங்கப்படும் ஆன் அரைவல் விசா நடைமுறையில் திருத்தம் செய்து, புதிய விதியை துபாயில் உள்ள வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) அறிவித்துள்ளது. அதன்படி, மேலே கூறப்பட்ட தகுதியுள்ள இந்தியர்கள் ஒரு பார்வையாளராக அமீரகத்திற்குள் நுழைவதற்கான விசா-ஆன்-அரவை பெறுவதற்கு முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த குறுகிய கால விசாவை நீட்டிக்க விரும்பினால், அவர்களால் அடுத்த 14 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நீட்டிக்க முடியும் என்றும் GDRFA குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பு சில ஆண்டுகளாக தகுதியான இந்தியப் பயணிகளுக்கு UAE விமான நிலையங்களில் வருகையின் போது இந்த விசா வழங்கப்பட்டு வந்தது.
அதாவது, இந்தியர்கள் தங்கள் விமானங்களில் இருந்து இறங்கியதும் அவர்களின் ‘ஆன் அரைவல் விசா’ பொதுவாக இமிகிரேஷன் கவுண்டரில் முத்திரையிடப்படும். ஆனால் இப்போது, துபாய்க்கு வரும் பயணிகள் இந்த விசாவிற்கு முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று GDRFA தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, துபாய்க்கு வரும் இந்திய பயணிகள் பின்வரும் தேவையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் GDRFA கூறியுள்ளது:
- நாட்டிற்குள் நுழைவதற்கான செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணம்.
- அமெரிக்காவால் வழங்கப்பட்ட நிரந்தர குடியிருப்பு அட்டை (கிரீன் கார்டு) அல்லது இங்கிலாந்து அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் வழங்கப்பட்ட குடியிருப்பு விசா.
- வெள்ளை பின்னணி கொண்ட தனிப்பட்ட புகைப்படம்.
ஆன்லைனில் விண்ணப்பித்தல்:
>> அமீரகத்திற்குள் நுழைவதற்கான ப்ரீ-அப்ரூவல் விசா-ஆன்-அரைவல்க்கு தகுதியான இந்திய பயணிகள் முதலில் GDRFA இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்- https://smart.gdrfad.gov.ae
>> விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை உள்ளிட்டு, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி கட்டணத்தைச் செலுத்த வேண்டும் (253 திர்ஹம்ஸ்). விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும் விசாவின் நகல் பயனரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் கோரிக்கை செயலாக்கப்படலாம்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- பயணி மீது அமீரகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் எந்தவொரு தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கக்கூடாது.
- பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணத்தின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களுக்கு குறைவாக இருக்க கூடாது.
- விண்ணப்பதாரர் தகுதிவாய்ந்த அமெரிக்க அதிகாரிகளால் வழங்கப்பட்ட குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் விசா அல்லது கிரீன் கார்டை வைத்திருக்க வேண்டும்.
- இல்லையெனில், UK அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட குடியிருப்பு விசாவைப் பெற்றிருக்க வேண்டும், அது செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
இதற்கு முன் எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரியில், அதன் கேரியரில் தங்கள் பயணத்தை முன்பதிவு செய்த சில இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட விசா-ஆன்-அரைவல் வசதியை அறிவித்தது. அதன்படி, இந்திய பயணிகளுக்கு 14 நாள் ஒற்றை நுழைவு விசாவாக வழங்கப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், விசா வழங்குவது GDRFA இன் முழுமையான விருப்பத்திற்கு உட்பட்டது என்பதையும் எமிரேட்ஸ் தெளிவுபடுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel