துபாயில் கடந்த ஏப்ரல் மாதம் பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளாகி மூடப்பட்டிருந்த எனர்ஜி மெட்ரோ நிலையம், தற்பொழுது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று (சனிக்கிழமை காலை) RTA வெளியிட்ட ஒரு அறிக்கையில் “RTA வெற்றிகரமாக துபாய் மெட்ரோவின் முழு செயல்பாடுகளையும் மீண்டும் தொடங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த மெட்ரோ நிலையம் மே 28 அன்று மீண்டும் செயல்படத் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் தற்பொழுது திட்டமிட்ட நாளிற்கு முன்னதாகவே மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த எனர்ஜி மெட்ரோ நிலையமானது உயர்ந்த தரம் மற்றும் செயல்திறனுடன் செயல்படத் தயாராக உள்ளது என்பதை உறுதிப்படுத்த அனைத்து பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகே மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்றும் RTA கூறியுள்ளது.
துபாயில் கடந்த மாதம் பெய்த கனமழையால் ஆன்பாசிவ், ஈக்விட்டி, மஷ்ரெக், எனர்ஜி ஆகிய 4 மெட்ரோ நிலையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டன. அவற்றில் ஆன்பாசிவ், ஈக்விட்டி மற்றும் மஷ்ரெக் ஆகிய மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களின் செயல்பாடுகளை கடந்த மே 19 அன்று RTA மீண்டும் தொடங்கியிருந்தது.
அத்துடன் மெட்ரோ நிலைய செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலத்தில், பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கு இடையே சமூகமான போக்குவரத்து மக்களுக்கு உறுதி செய்ய சிறப்பு பேருந்து சேவைகளை வழங்கி துபாய் RTA தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பயணிகளுக்கு RTA ஒரு அறிவிப்பில் “உங்கள் புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், மேலும் உங்கள் இலக்குகளுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான பயணங்களை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel