சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்குச் சொந்தமான போயிங் 777-300ER ரக விமானம் இந்த வாரம் ஒரு அதி தீவிரமான டர்புலன்ஸ் (turbulance) எனப்படும் நிகழ்வில் சிக்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டதுடன் பல பயணிகளும் காயமடைந்தனர். இதன் காரணமாக, அந்நிறுவனம் தற்போது சீட்பெல்ட் கையொப்பக் கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை மே 21ஆம் தேதி, 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் லண்டனில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென தீவிரமான டர்புலன்சில் (வளிமண்டலத்தின் சீரற்ற இயக்கம்) சிக்கியதால் விமானம் தாறுமாறாகக் குலுங்கியிருக்கிறது.
இதன் விளைவாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் கேபினைச் சுற்றி வீசப்பட்டதுடன் பயணிகளில் சிலர் விமானத்தின் மேற்கூரையில் மோதி கடுமையாக காயமடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் சிலரின் தலைகள் இருக்கைகளுக்கு மேலே உள்ள விளக்குகளில் மோதியதாகவும், விமான மேற்கூறையின் பேனல்களை உடைத்ததாகவும் பயணி ஒருவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, விமானத்தை இயக்கிய பைலட்டுகள் அவசரமாக பாங்காக்கில் தரையிறக்கியுள்ளனர். இருப்பினும், தீவிரமான டர்புலன்சில் விமானம் சிக்கிய இச்சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நபர் உயிரிழந்துள்ளார் என்றும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிகழ்வுக்குப் பின்னர், சீட் பெல்ட் அடையாளம் இருக்கும் போது சூடான பானங்கள் அல்லது உணவுகளை வழங்குவதில்லை என்பது உட்பட, டர்புலன்ஸிற்குப் பிறகு மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை விமான பயண வழிகாட்டுதல்களில் கடைப்பிடிப்பதாக சிங்கப்பூர் விமான நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
மேலும், “எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதால், SIA எங்கள் செயல்முறைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும்” என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் விமானத்தின் உள்ளே மேல்நிலை கேபின் பேனல்கள், ஆக்ஸிஜன் முகமூடிகள் மற்றும் கூரையில் தொங்கும் பேனல்கள் மற்றும் சாமான்கள் சுற்றி சிதறிக் கிடப்பதைக் காணமுடிகிறது.
நேற்று வியாழக்கிழமை வெளியான செய்திகளின் படி, 46 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் பாங்காக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும், 46 பேரில் 20 பேர் தீவிர சிகிச்சையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் 19 பேர் இன்னும் பாங்காக்கில் இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு முதுகுத் தண்டுவடம், மூளை மற்றும் மண்டை ஓட்டில் காயங்கள் இருந்ததாக ஒரு மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு, தொழில்துறையின் பெரும்பகுதிக்கான அளவுகோலாகக் கருதப்படுகிறது. மேலும் உலகின் பல நாடுகளுக்கும் விமான சேவையை அளித்து வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சமீபத்திய ஆண்டுகளில் இது மாதிரியான பெரிய சம்பவங்களில் ஈடுபட்டதாக எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டர்புலன்ஸ் என்றால் என்ன?
டர்புலன்ஸ் எனப்படும் காற்று கொந்தளிப்பானது பொதுவாக மேகத்தின் வழியாக விமானம் பறக்கும் போது ஏற்படும் ஒரு நிகழ்வாகும். இது பூமியின் வளிமண்டலத்தில் காற்றின் ஒழுங்கற்ற மற்றும் கணிக்க முடியாத இயக்கமாகும். விமான பயணங்களின்போது இந்த கொந்தளிப்பை பயணிகள் அவ்வப்போது உணரலாம். இருப்பினும் சில நேரங்களில் விமானத்தின் வானிலை ரேடாரில் தெரியாத டர்புலன்சும் உள்ளது.
எனவே, அத்தகைய சூழலில் விமானம் சிக்கிக்கொள்ளும் போது இது போன்ற தீவிரமான நிகழ்வு ஏற்படுகிறது. எனினும் உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான விமானங்கள் இயக்கப்படும் சூழலில் இதுபோன்ற கடுமையான பாதிப்பால் ஏற்படும் காயங்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை என்று விமான நிபுணர் ஜான் ஸ்ட்ரிக்லேண்ட் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
மேலும், சீட் பெல்ட் அணிவது “வாழ்வுக்கும் இறப்புக்கும் உள்ள வித்தியாசம்” என்று கூறிய ஜான், கடுமையான கொந்தளிப்பின் போது சீட் பெல்ட் அணியாமல் இருப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் விளக்கியுள்ளார். இந்நிலையில், உலகளவில் நிலவும் தற்போதைய காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் இது போன்ற கடுமையான கொந்தளிப்பை உருவாக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel