ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறை நாட்களில், அடுத்த ஆண்டு முதல் சில மாற்றங்களை அமீரக அரசு அமல்படுத்த இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் பொது விடுமுறை நாட்களில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரவை தீர்மானம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரவை வெளியிட்டுள்ள தீர்மானத்தின்படி, அமீரகக் குடியிருப்பாளர்கள் 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 13 நாட்கள் வரை பொது விடுமுறை நாட்களை அனுபவிக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பொது விடுமுறை குறித்த அமைச்சரவை தீர்மானம், ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக அரசின் இந்த புதிய அறிவிப்பின் மூலம், இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் ஃபித்ருக்கு வழங்கப்படும் விடுமுறையானது வழக்கத்தை விட அடுத்த ஆண்டு சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, ஈத் அல் ஃபித்ருக்கு வழக்கமாக விடப்படும் விடுமுறை நாட்களை அடுத்த ஆண்டு அமீரக அரசு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது சமீபத்திய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பொது விடுமுறை நாட்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. அத்துடன், அமீரகத்தில் உள்ள தனியார் மற்றும் பொதுத் துறை ஊழியர்களுக்கு பொருந்தும் இந்த விடுமுறைகள், ஊழியர்கள் ஒரு வருடத்தில் எடுக்கக்கூடிய 30 வருடாந்திர விடுப்புகளுடன் கூடுதலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், வருடாந்திர விடுப்பு மற்றும் பொது விடுமுறை நாட்களின் இந்த தனித்துவமான கலவையின் காரணமாக, குடியிருப்பாளர்கள் ஒரு வருடத்தில் மூன்று விடுமுறைகள் வரை எடுக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை தீர்மானத்தின்படி, அடுத்த ஆண்டிற்கான விடுமுறை நாட்களின் முழுப் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
புத்தாண்டு: 1 நாள் விடுமுறை
ஜனவரி 1, 2025 புதன்கிழமை, குடியிருப்பாளர்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகக் குடியிருப்பாளர்கள் புத்தாண்டு தினத்தன்று பொது விடுமுறையை அனுபவிப்பார்கள்.
ஈத் அல் ஃபித்ர்: 4 நாட்கள் வரை விடுமுறை
ரமலான் மாதத்திற்குப் பிறகு வரும் ஈத் அல் ஃபித்ர் பண்டிகையைக் கொண்டாட குடியிருப்பாளர்களுக்கு நான்கு நாட்கள் வரை விடுமுறை கிடைக்கும். மேலும், இந்த ஆண்டு விடுமுறை சற்று வித்தியாசமானதாக இருக்கும். அதாவது, ரமலான் 30 நாட்கள் நீடித்தால், ரமலான் 30 முதல் ஷவ்வால் 3 வரை குடியிருப்பாளர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். மாறாக, புனித மாதம் 29 நாட்கள் நீடித்தால், ஷவ்வால் 1 முதல் 3 வரை மட்டுமே விடுமுறை வழங்கப்படும்.
2024 இல், ஈத் அல் ஃபித்ர் விடுமுறையானது ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை இருந்தது. இதன் மூலம் அதிகபட்சம் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய அறிவிப்பின் மூலம் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையில் ஒரு நாள் குறைக்கப்பட்டு அதிகபட்சம் 4 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படும். அதுவே ரமலான் நோன்பு 29 நாட்களுடன் முடிவடைந்தால் 3 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரஃபா நாள், ஈத் அல் அதா: ஜூன் மாதத்தில் 4 நாட்கள் விடுமுறை
இஸ்லாமியர்களின் புனிதமான நாளாகக் கருதப்படும் அரஃபா நாளை முன்னிட்டு இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதம் 9 அன்று விடுமுறை கிடைக்கும். இதைத் தொடர்ந்து இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் அதாவிற்கு (துல் ஹஜ் 10-12) மூன்று நாள் விடுமுறை அளிக்கப்படும். எனவே, குடியிருப்பாளர்கள் நான்கு நாள் விடுமுறையை அனுபவிக்கலாம்.
ஹிஜ்ரி புத்தாண்டு: ஜூன் மாதத்தில் 1 நாள் விடுமுறை
இஸ்லாமிய வருடப் பிறப்பான முஹர்ரம் மாதம் 1ம் தேதி குடியிருப்பாளர்களுக்கு விடுமுறை நாளாகும். இது ஈத் அல் அதா விடுமுறை முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு வருகிறது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்:
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் செப்டம்பர் மாதத்தில் வருவதால் அமீரக குடியிருப்பாளர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் பொது விடுமுறை கிடைக்கும்.
அமீரக தேசிய தினம்:
நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடுவதற்காக அமீரக குடியிருப்பாளர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இதன் மூலம் செவ்வாய், டிசம்பர் 2 மற்றும் புதன்கிழமை, டிசம்பர் 3 ஆகிய நாட்கள் பொது விடுமுறை நாட்களாகும். மேலும் இதுவே 2025 ஆம் ஆண்டின் கடைசி பொது விடுமுறை நாட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விடுமுறையை மாற்ற முடியுமா?
அமைச்சரவை தீர்மானத்தின்படி, ஈத் விடுமுறைகள் தவிர, மற்ற அனைத்தும் வாரத்தின் தொடக்கத்தில் அல்லது வார இறுதி நாட்களுக்கு மாற்றப்படலாம். மேலும் இது அமீரக அமைச்சரவை முடிவின் மூலம் மட்டுமே செய்ய முடியும். அதுவே, அதிகாரப்பூர்வ விடுமுறை வார இறுதியில் வந்தால், அதை வார நாளுக்கு மாற்ற முடியாது. மேலும், ஒவ்வொரு எமிரேட்டிலும் உள்ள உள்ளூர் அரசாங்கம் அவசியமானதாகக் கருதப்படும் கூடுதல் விடுமுறைகளையும் அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel