ADVERTISEMENT

UAE டெங்கு ஒழிப்பு பிரச்சாரம்: கொசுக்கள் பெருகும் இடங்களை அடையாளம் காண GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்திய அமீரகம்!!

Published: 25 May 2024, 4:42 PM |
Updated: 25 May 2024, 4:42 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுகாதார அதிகாரிகள் மொத்தம் 409 இடங்களில் டெங்குவை உண்டாக்கும் கொசுக்களை கண்டறிந்து அழித்துள்ளதாக சுகாதார துறையின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை (மே 22) நடைபெற்ற கூட்டாட்சி தேசிய கவுன்சில் (Federal National Council-FNC) அமர்வின் போது பேசிய சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் ஓவைஸ் இதனை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் டெங்கு காய்ச்சலை எதிர்த்துப் போராட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நாடு முழுவதும் உள்ள கொசுக்கள் பெருகும் இடங்களை வரைபடமாக்க சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் (Mohap) GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாகவும் அவர் அந்த அமர்வின் போது தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு தழுவிய டெங்கு எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவளிக்க எமிரேட்ஸ் சுகாதார சேவைகளின் ஒன்பது சிறப்புக் குழுக்கள் வடக்கு எமிரேட்ஸ் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கொசு மாதிரிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் செயல்திறனை சோதிக்க பூச்சி ஆய்வகம் அமைக்கப்பட்டதாகவும் அல் ஓவைஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், அமைச்சகம் அபுதாபி விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து 1,200க்கும் மேற்பட்ட கொசு ஆய்வுகள் மற்றும் 309 டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வு செய்ததாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். இது தவிர, நாடு முழுவதும் கொசுக்களை ஒழிக்க சுகாதார கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, அமைச்சகத்தின் முனிசிபல் விவகாரத் துறையின் இயக்குநர் ஒதைபா சயீத் அல் கைதி (Othaibah Saeed Al Qaydi) செய்தி ஊடகம் ஒன்றில் நேர்காணலில் பேசுகையில், அமைச்சகம் கொசுப் பெருக்கத்தைத் தடுக்க GIS மேப்பிங், சென்சார்கள், முன்கணிப்பு மாடலிங் மற்றும் பெரிய தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், பொதுமக்களை கொசு விரட்டிகளைப் பயன்படுத்தவும், வெளிப்பாட்டைக் குறைக்க தங்கள் கைகளையும் கால்களையும் மறைக்கும் பாதுகாப்பு ஆடைகளை அணியவும் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். முக்கியமாக, குடியிருப்புகளில்  கொசு எதிர்ப்பு திரைகள் மற்றும் வலைகளை நிறுவுதல் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

தற்சமயம், அமீரகத்தில் டெங்கு பாதிப்பைக் குறைக்க சுகாதாரப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், டெங்கு கண்காணிப்பை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயண வரலாறு இல்லாமல் டெங்கு நோயைக் கண்டறிவது மற்றும் உடனடி மின்னணு வழக்கு அறிக்கையை உறுதி செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதில் அடங்கும்.

அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள 134 எமிரேட்ஸ் சுகாதார சேவை வசதிகளும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் என்பது ‘Aedes aegypti’ எனப்படும் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வரலாறு காணாத மழை அமீரகத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. இதன் விளைவு, தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் பெருகி நாட்டில் டெங்கு காய்ச்சலைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel