அமீரகத்தில் கோடை விடுமுறை, ஈத் விடுமுறை, குளிர்கால சீசன் என குறிப்பிட்ட காலங்களில் விமான பயணிகளின் போக்குவரத்து சாதாரண நாட்களை விட அதிகமாக இருக்கும். இதனால் அந்த சமயங்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு வழிமுறைகளையும் விமான நிலையங்கள் அறிவிப்பதுண்டு. இத்தகைய சமயங்களில் பயணிக்கும் நபர்களாக நீங்கள் இருந்தால் இந்த பதிவை தெரிந்து கொள்வது உங்களுக்கு பயனளிக்கும்.
தற்சமயம் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) 2.6 மில்லியன் பயணிகள் வரும் நாட்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிப்பார்கள் என்றும் விமான நிலையத்தில் மிகவும் பரபரப்பான நாளாக வரக்கூடிய ஜூலை 6 சனிக்கிழமை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பயணிகளின் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த குறிப்பிட்ட நாட்களில் விமானச் செக்-இன் கவுண்டர்களில் நீண்ட வரிசைகளில் பயணிகள் காத்திருக்க வேண்டியிருக்கும். இருப்பினும், பயணிகள் ஆன்லைனில் அல்லது மாற்று இடங்களில் செக் இன் செய்தால், பயணிகளின் போக்குவரத்து அதிகமுள்ள காலங்களில் இந்த வரிசைகளை சுமார் 25 சதவீதம் குறைக்கலாம் என்று மூத்த விமான நிறுவன நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் செக்-இன் செய்வதற்கான பெரும்பாலான மாற்று வழிகள் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸின் அதிகாரி கூறுகையில், எமிரேட்ஸில் பயணிக்கும் பயணிகள் ஆன்லைனில் செக்-இன் செய்து விமான நிலையத்திற்கு தெரியப்படுத்தினால், செல்ஃப் சர்வீஸ் பேக்கேஜ் டிராப் கியோஸ்க்களில் (self service baggage drop kiosks) அவர்களின் பரிவர்த்தனை மிக வேகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவிக்கையில் “இந்த பயணிகளின் போக்குவரத்து அதிகமுள்ள காலங்களில், வரிசையில் நிற்கும் நேரம் சராசரியாக 20 நிமிடங்கள் இருக்கும், இருப்பினும் எங்கள் பயணிகள் 15 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டாம் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆன்லைனில் அல்லது ஆப்ஸில் (Apps) சரிபார்ப்பது மிகவும் எளிதானது, பின்னர் அவர்களின் லக்கேஜ்களுக்கு சுய-சேவை கியோஸ்க்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
நீண்ட வரிசைகளைத் தவிர்க்க 4 வழிகள்
அப்ளிகேஷன் அல்லது ஆன்லைன் மூலம் செக்-இன் செய்வது பயணிகளிடையே மிகவும் பிரபலமானதாகும். கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் இதைப் பயன்படுத்துகின்றனர். இது விமானம் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கப்படும்.
மேலும் பயணிகள் தங்களுடைய லக்கேஜ்களை முந்தைய நாள் விமான நிலையத்தில் இலவசமாக இறக்கிவிடலாம். அதாவது துபாயில் இருந்து புறப்படும் பயணிகள், சீக்கிரம் செக்-இன் செய்து, புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தங்கள் லக்கேஜ்களை இறக்கிவிடலாம். பின்னர் புறப்படும் நேரம் நெருங்கும் போது, பயணிகள் விமான நிலையத்தில் உள்ள இமிகிரேஷன் பகுதிக்கு நேரடியாக செல்லலாம்.
இதனுடன் துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டரில் (DIFC) உள்ள எமிரேட்ஸ் ஏர்லைனின் சிட்டி செக்-இன் வசதியில், பயணிகள் 24 மணி நேரத்திற்கு முன்பில் இருந்து, விமானம் புறப்படுவதற்கு நான்கு மணிநேரத்திற்கு முன் வரையிலும் லக்கேஜ்களை இறக்கிவிடலாம். அதேபோல் அஜ்மான் சென்ட்ரல் பஸ் டெர்மினலில் 24 மணிநேர சிட்டி செக்-இன் வசதியையும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் கொண்டுள்ளது.
அதேபோல் வீட்டில் செக்-இன் செய்வதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம், அதற்கான ஏஜென்ட்கள் நேரடியாக பயணிகளின் வீடு, ஹோட்டல் அல்லது அலுவலகத்தில் செயல்முறையை முடித்து, லக்கேஜ்களை எடுத்துச்செல்வார்கள். இதனால் பயணிகள் வெறும் ஹாண்ட் பேக்கேஜூடன் எளிதாக விமான நிலையம் வரலாம். மேற்கூறிய எல்லா எமிரேட்ஸ் செக்-இன் விருப்பங்களும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அமெரிக்கா செல்லும் பயணிகளை தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிஹாட் ஏர்வேஸ்
துபாயைப் போன்றே அபுதாபியிலும் வரக்கூடிய நாட்களில் அதிகளவு பயணிகள் பயணம் செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அபுதாபியை தளமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் கூறுகையில் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் சையத் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ஐந்து மில்லியன் பயணிகள் எதிர்பார்க்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.
எனவே இந்த சமயங்களில் அபுதாபியில் இருந்து எதிஹாட் ஏர்வேஸ் மூலம் பயணிக்கும் பயணிகள் தங்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், நான்கு லக்கேஜ்கள் வரை 220 திர்ஹம்ஸ் கட்டணம் என்ற முறையில் வீட்டில் செக்-இன் சேவை பெறலாம் என்றும் இதன்மூலம் அபுதாபி விமான நிலையத்தில், இந்த பயணிகள் விமான நிலையத்தில் லக்கேஜ் வரிசைகளைத் தவிர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் செக்-இன் வசதியைப் பயன்படுத்தும் பயணிகள், டெர்மினலில் உள்ள தானியங்கி செல்ஃப்-சர்வீஸ் லக்கேஜ் டிராப்களுக்கு தங்கள் லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். மேலும் அபுதாபியில் இருக்கும் அபுதாபி குரூஸ் டெர்மினல் (திறந்த 24 மணி நேரமும் திறந்திருக்கும் கவுண்டர்), தி ஃபவுன்டைன்ஸ் – YAS மால், முசாஃபா மற்றும் அல் அய்ன் ஆகிய இடங்களில் உள்ள சிட்டி செக்-இன் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், எதிஹாட் ஏர்வேஸ் போன்றே ஃப்ளைதுபாய், ஏர் அரேபியா உள்ளிட்ட விமான நிறுவனங்களும் ஆன்லைன் செக்-இன், சிட்டி செக்-இன் போன்ற சேவைகளை வழங்குவதால் பயணிகள் இந்த சேவைகளை பயன்படுத்தி தங்களின் பயணங்களை கடைசி நேர பரபரப்பின்றியும் தாமதமின்றியும் சுமூகமாக பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel