ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து வரும் வாகனங்களின் பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டுமே போக்குவரத்து நெரிசலானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமீரகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் கடந்த 2023 ஆம் ஆண்டில் நிலவிய போக்குவரத்து நெரிசலால் மட்டுமே 8 முதல் 33 மணிநேரம் வரை தாமதங்களை எதிர்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய காலங்களில் நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து அளவுகள் போன்றவை இந்த பயண தாமதங்களுக்கு பங்களித்தன என்று Inrix எனும் தரவு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனமானது உலகம் முழுவதும் 947 நகர்ப்புறங்களை ஆய்வு செய்தது என கூறப்பட்டுள்ளது. அவற்றில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நகர்ப்புறத்தில் உள்ள முக்கிய வேலைவாய்ப்பு மையங்களுக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் ஆகும் நேரத்தைப் பிரத்தியேகமாகப் பார்த்து இந்த பயண நேரங்கள் கணக்கிடப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் துபாயின் மக்கள்தொகை அதற்கு முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 100,000 அதிகரித்ததால், வாகன ஓட்டிகள் கடந்த ஆண்டு (33 மணி நேர தாமதம்) அதற்கு முத்தைய ஆண்டைவிட (22 மணிநேரம்) அதிக மணிநேரங்களை போக்குவரத்து நெரிசலால் இழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து துபாயில் பணிபுரிந்து வரும் ஷார்ஜாவாசி ஒருவர் கூறுகையில் “2023-2024 ஆம் ஆண்டில் போக்குவரத்து நிச்சயமாக அதிகரித்துள்ளது. ஷார்ஜாவில் இருந்து ஷேக் சையத் சாலைக்கு காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் வீடு திரும்ப 2 மணி நேரமும் ஆகும். ஆனால் இப்போது காலையில் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரமும், நான் திரும்பி வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகவும் ஆகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் மற்றுமொருவர் கூறுகையில் “துபாய் மற்றும் ஷார்ஜா எமிரேட்டுகளுக்குள்ளும் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இரு எமிரேட்களில் உள்ள வெவ்வேறு இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நான் தினசரி பொருட்களை வழங்குகிறேன். அதிகரித்த ட்ராஃபிக் காரணமாக எனது பணியை எனது நேரத்திற்குள் முடிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
துபாய் டோல் ஆபரேட்டரான சாலிக்கின் (salik) தரவும் இதேபோன்ற தகவல்களை காட்டியுள்ளது. அதாவது சாலிக் 2022 இன் இறுதியில் 3.7 மில்லியன் வாகனங்களை பதிவு செய்திருந்தது என்றும், இது 2023 இன் இறுதியில் 4.0 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இது அமீரகத்தில் வாகனங்களின் பயன்பாடு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அபுதாபியில், போக்குவரத்து தாமதம் மற்றும் நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் 20 மணிநேரமும், உம் அல் குவைனில் வாகன ஓட்டிகள் 15 மணிநேரமும், அல் அய்னில் 9 மணிநேரமும், ஃபுஜைராவில் 8 மணிநேரமும் இழந்தனர் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரக தலைநகரின் மக்கள்தொகை வேகமாக விரிவடைந்து, 2024 இல் துபாயை விஞ்சி கிட்டத்தட்ட 3.8 மில்லியனை எட்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, அமீரகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் உள்ள நிறுவனங்கள் பணியமர்த்துவதில் ஈடுபட்டு, பொருளாதாரத்தை துரிதப்படுத்தியது மற்றும் மக்கள்தொகை, பொருளாதார வளர்ச்சி போன்றவை அடுத்தடுத்த போக்குவரத்தின் எழுச்சிக்கு வழிவகுத்தன என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை முறியடிக்கும் வகையில், அமீரகமானது அடுத்த ஆண்டு ஏர் டாக்ஸி போக்குவரத்து அமைப்பை அறிமுகப்படுத்த உள்ளது, இது துபாய் மற்றும் அபுதாபி இடையேயான பயண நேரத்தை வெறும் 30 நிமிடங்களில் குறைக்கும் என்றும் மேலும் எமிரேட்டுகளுக்குள் பயணிக்கும் நேரமும் பயணிகளுக்கு குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், 2023 இன்ரிக்ஸ் குளோபலில் மிகவும் நெரிசலான பகுதிகளின் பட்டியலில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. நியூயார்க்கைத் தொடர்ந்து மெக்சிகோ சிட்டி, லண்டன், பாரிஸ் மற்றும் சிகாகோ ஆகிய நகரங்கள் உள்ளன. 2023 இல் உலகம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்தது என்றும் பகுப்பாய்வு செய்யப்பட்ட 947 நகர்ப்புறங்களில், தாமதங்கள் 78 சதவீதம் அதிகரித்து 19 சதவீதம் குறைந்துள்ளது, 3 சதவீதம் மாறாமல் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel