ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், ‘கோடைகால சங்கிராந்தி’ எனப்படும் ஆண்டின் மிகவும் நீண்ட நாளானது இம்மாதத்தில் நிகழவிருப்பதாக வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதாவது, பூமியின் துருவங்களில் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் சாய்ந்திருக்கும் போது கோடைகால சங்கிராந்தியுடன் கோடைகால பருவம் தொடங்குவதாக கூறப்படுகின்றன.
இந்த நிகழ்வானது ஐக்கிய அரபு அமீரகம் உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் மிக நீண்ட நாளைக் குறிக்கிறது எனவும் அந்த ஆய்வுகள் கூறியுள்ளன. குறிப்பாக, அமீரகத்தில் இந்நிகழ்வானது ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி ய வரை என 13 மணி நேரம் 48 நிமிடங்கள் நீடிக்கும் என்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஆண்டுகளில் ஒவ்வொரு ஜூன் மாதம் 21ம் தேதி அன்று மிகவும் நீண்ட நாள் நிகழ்கிறது. இருப்பினும், இந்த ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் இது ஜூன் 20 அன்று நிகழும் என கூறப்பட்டுள்ளது. அதாவது 1796ம் ஆண்டுக்கு பின்னர் ஒரு நாள் முன்னதாகவே இது நிகழவிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அமீரகத்தைப் பொறுத்தவரை ஆண்டின் மிக நீண்ட நாள் ஜூன் 21 அன்று நிகழும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு ஒன்றியத்தின் உறுப்பினருமான இப்ராஹிம் அல் ஜர்வான் பேசுகையில், கோடைகால சங்கிராந்தி தேதியன்று, சூரியன் அதன் வடக்குப் பகுதியில் உள்ள கடகரேகைக்கு செங்குத்தாக இருக்கும் என்று விவரித்துள்ளார்.
அந்தசமயத்தில், நாட்டின் தெற்குப் பகுதிகள் உட்பட செங்குத்தாக உள்ள பகுதிகளில் நண்பகலில் நிழல் இல்லாமல், நடுக்கோடு நிழல் மறைந்துவிடும் எனவும், அரேபிய தீபகற்பம் முழுவதும், பூமியின் வடக்குப் பகுதி முழுவதும் மிகக் குறுகிய நடுக்கோடு நிழல் இருக்கும் எனவும் விளக்கமளித்தார்.
அல் ஜர்வான் கூற்றுப்படி, கோடைக்கால சங்கிராந்தியின் போது பகலில் 41ºC முதல் 43ºC வரையிலும், இரவில் 26ºC மற்றும் 29ºC வரையிலும் வெப்பநிலை இருக்கும் என்றும், சில பகுதிகளில், வெப்பநிலை 50ºC ஐ விட அதிகமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் முதல் செப்டம்பர் வரை:
ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 10 வரை நீடிக்கும் கோடைகாலத்தின் முதல் பாதியில் நாட்டில் பொதுவாக வறண்ட வானிலையாக இருக்கும். இதனால் நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பமான மற்றும் வறண்ட காற்று நிலவும். இது தூசி மற்றும் மணலை நாடு முழுவதும் வீசும், வெப்பக் காற்று அலைகளை உருவாக்கும், இதனால் குறைந்தபட்சம் 4 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கோடையின் இரண்டாம் பாதி ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 23 வரை நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் அமீரகம் தொடர்ந்து அதிக வெப்பநிலையுடன் அதிக ஈரப்பதத்தை அனுபவிக்கும். நாட்டில் ஈரப்பதமான காற்று வீசும், இது மலையின் மலைப்பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குவிந்த மேகங்கள் உருவாகத் தூண்டும். இந்த மேகங்கள் இடியுடன் கூடிய மழையை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel