அபுதாபி: விமான பயணிகளுக்காக அல் அய்னில் தொடங்கப்பட்டுள்ள புதிய சிட்டி செக்-இன் சேவை..!!
அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணிகளுக்காக அல் அய்னில் புதிய சிட்டி செக்-இன் சேவை திறக்கப்பட்டுள்ளது. சிட்டி செக்-இன் சேவைகளை இயக்கும் Morafiq Aviation Services இன் சமீபத்திய கிளையானது ஷாக்பூத் பின் சுல்தான் ஸ்ட்ரீட்டில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட், குவைதாத்தில் இந்த சேவையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் இருக்கக்கூடிய முசாஃபா மற்றும் யாஸ் மாலில் சேவை மையங்கள் திறக்கப்பட்ட பிறகு, அபுதாபி எமிரேட்டில் இந்த ஆண்டு தொடங்கப்படும் மூன்றாவது சிட்டி செக் இன் சேவை இதுவாகும். அல் அய்னில் உள்ள இந்த வசதி, சையத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எதிஹாட் ஏர்வேஸ், ஏர் அரேபியா, விஸ் ஏர் மற்றும் எகிப்து ஏர் ஆகியவற்றுடன் பயணிக்கும் பயணிகளுக்கு சேவை செய்யும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில் “பயணிகள் தங்கள் விமானங்கள் புறப்படுவதற்கு 7 மணி நேரத்திற்கு முன் தொடங்கி 24 மணி நேரத்திற்கு முன் வரை லக்கேஜ்களை ஒப்படைக்கலாம் மற்றும் போர்டிங் கார்டுகளை சேகரிக்கலாம்” என்று மொராபிக் ஏவியேஷன் சர்வீசஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன் “எங்கள் அல் அய்ன் செக்-இன் இடத்தில் செக்-இன் செய்வதன் மூலம், பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட வரிசைகளைத் தவிர்த்து, தங்கள் லக்கேஜ்களை முன்கூட்டியே இறக்கிவிட்டு, மேலும் நிதானமான பயணத்தை அனுபவிக்க முடியும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் அய்ன், யாஸ் மால் மற்றும் முசாஃபாவில் உள்ள இந்த சேவைகளைத் தவிர, சையத் போர்ட்டில் உள்ள அபுதாபி குரூஸ் டெர்மினல் 1 இலும் செக்-இன் செய்வதற்கான வசதி உள்ளது. அல் அய்னில் உள்ள இந்த செக்-இன் கவுண்டர் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு செக்-இன் கட்டணங்கள் பெரியவர்களுக்கு (12 வயதுக்கு மேற்பட்ட பயணிகளுக்கு) 35 திர்ஹம்ஸ், சிறுவர்களுக்கு 25 திர்ஹம்ஸ் (12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுள்ள சிறுவர்களுக்ககு), மற்றும் ஒரு குழந்தைக்கு 15 திர்ஹம்ஸ்(இரண்டு வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு) என வரையறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel