அமீரக செய்திகள்

கனமழையால் துபாய் சந்தித்த பாதிப்பின் எதிரொலி: 30 பில்லியன் திர்ஹம்ஸ் செலவில் மழைநீர் வடிகால் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த துபாய் ஆட்சியாளர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் துபாயில் மழைநீர் வடிகால் வலையமைப்பை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்திற்கு 30 பில்லியன் திர்ஹம்கள் செலவில் ஒப்புதல் அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  ‘தஸ்ரீஃப் (Tasreef)’ என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம், எமிரேட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய துபாயின் மழைநீர் வடிகால் அமைப்பின் திறனை 700% அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்திற்கான கட்டுமானமானது உடனடியாக தொடங்கப்பட்டு 2033 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்திட்டமானது அடுத்த நூறு ஆண்டுகளுக்கு துபாயில் சேவை செய்யும் என்று ஷேக் முகமது கூறியுள்ளார்.

 

துபாயின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி, நாளொன்றுக்கு 20 மில்லியன் கன மீட்டருக்கும் அதிகமான தண்ணீரை உறிஞ்சும் இந்தத் திட்டம், இப்பகுதியில் மழைநீரைச் சேகரிக்கும் மிகப்பெரிய வலையமைப்பாக இருக்கும் என கூறப்படுகின்றது. ‘தஸ்ரீஃப்’ என்பது 2019 இல் எக்ஸ்போ துபாய் பகுதி, அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஜெபல் அலி ஆகியவற்றை உள்ளடக்கிய துபாயால் தொடங்கப்பட்ட வடிகால் திட்டங்களின் தொடர்ச்சியாகும்.

அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகம் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் மூழ்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மழைப்பொழிவு அதிகரிப்பு போன்ற எதிர்கால காலநிலை மாற்ற தாக்கங்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது, மத்திய கிழக்கிலேயே மிகப் பெரிய டன்னல் போரிங் மெஷின்களை (TBM) பயன்படுத்தும் என்றும், அவற்றின் செயல்திறன், வேகம் மற்றும் பல்வேறு நிலப்பரப்பு நிலைமைகளை திறன்பட கையாளும் என்றும் கூறப்படுகின்றது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பெய்த கனமழையால் துபாய் சந்தித்த பாதிப்புகள் போன்று இனி ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!