துபாயின் டோல் கேட் ஆபரேட்டரான சாலிக் (Salik), துபாயில் உள்ள முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்தை மேம்படுத்தவும் நெரிசலைக் குறைக்கவும் புதிதாக இரண்டு சாலிக் கேட்களை திறக்க உள்ளது. அதன்படி, அல் கைல் சாலையில் பிசினஸ் பே கிராசிங் இடத்திலும், ஷேக் சையத் சாலையில் அல் சஃபா சவுத் இடத்திலும் இந்த புதிய சாலிக் கேட்கள் நிறுவப்படவுள்ளது.
RTA வின் விரிவான போக்குவரத்து இயக்க ஆய்வுக்குப் பிறகு, புதிய சாலிக் கேட்களை நிறுவுவதற்கு இந்த இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சாலிக் கேட்கள் நவம்பர் 2024க்குள் திறக்கப்படும் எனவும், இவை இரண்டும் IPO மற்றும் DFM இல் சாலிக் பட்டியலிடப்பட்ட பிறகு கொண்டுவரப்பட்டுள்ள சாலிக்கின் முதல் புதிய டோல்-கேட்டுகள் எனவும் கூறப்படுகிறது.
RTAவின் படி, இரண்டு சாலிக் கேட்டுகளும் அல் கைல் சாலையில் 15 சதவீதம் வரையிலும், அல் ரபாத் தெருவில் 16 சதவீதம் வரையிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷேக் சையத் சாலையிலிருந்து மைதான் (meydan) ஸ்ட்ரீட் வரையிலான வலதுபுறம் திரும்பும் போக்குவரத்தை 15 சதவீதம் வரை குறைக்க இந்த புதிய திட்டம் வழிவகுக்கும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இது குறித்து சாலிக் நிறுவனத்தின் CEO இப்ராஹிம் சுல்தான் அல் ஹதாத் அவர்கள் கூறுகையில், இந்த புதிய நுழைவாயில்களை அறிமுகப்படுத்துவதில் RTA உடனான எங்கள் கூட்டாண்மை ஸ்மார்ட் மற்றும் நிலையான இயக்கம் தீர்வுகளுடன் துபாயின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான எங்கள் பயணத்தின் மற்றொரு முக்கியமான படியாகும் என்றும் பதிவிட்டுள்ளார்.
பிசினஸ் பே கிராசிங் மற்றும் அல் சஃபா சவுத் ஆகிய இரண்டும் நகரின் முக்கிய இடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மிக முக்கியமான நுழைவாயில்களாகும். அத்துடன் போக்குவரத்து சுங்கக் கட்டணக் கொள்கைகள், மெட்ரோ, பேருந்துகள், கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மென்மையான இயக்கம் விருப்பங்கள் போன்ற வெகுஜனப் போக்குவரத்து வழிகளை நோக்கி பொதுமக்களை மாற்ற இது ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
வரும் நவம்பர் முதல் செயல்படத் தொடங்கும் இந்த இரண்டு டோல் கேட்கள் மூலம் துபாயில் உள்ள சாலிக்கின் மொத்த டோல் கேட்களின் எண்ணிக்கை 8ல் இருந்து 10 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அல் பர்ஷா, அல் கர்ஹூத் பாலம், அல் மக்தூம் பாலம், அல் மம்சார் சவுத், அல் மம்சார் நார்த், அல் சஃபா, ஏர்போர்ட் சுரங்கப்பாதை, ஜெபல் அலி ஆகிய இடங்களில் சாலிக் டோல் கேட்கள் பயன்பாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel