வங்க தேசத்தில் ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் விளைவாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போராட்டங்களை நடத்திய வங்க தேசத்தை சார்ந்த மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 54 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை முடிந்ததும் நாடு கடத்தப்படுவார்கள் என்று அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வங்க தேசத்தில் ஏற்பட்ட வேலை இட ஒதுக்கீடு தொடர்பான அமைதியின்மையின் போது தங்கள் நாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காகவும் கலவரங்களைத் தூண்டியதற்காகவும் வங்க தேசத்தை சேர்ந்த மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக 53 பேருக்கு 10 ஆண்டுகளும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து இதில் பங்கேற்றதற்காக ஒரு நபருக்கு 11 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அபுதாபி ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றமானது ஜூலை 22 (திங்கள்கிழமை) அன்று இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. அத்துடன் சிறைத்தண்டனையின் முடிவில் அவர்களை நாடு கடத்தவும், கைப்பற்றப்பட்ட அனைத்து சாதனங்களையும் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல தெருக்களில் தங்கள் சொந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று கூடி கலவரத்தைத் தூண்டியதற்காக வங்க தேசத்தைச் சேர்ந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரக அட்டர்னி ஜெனரல், அதிபர் டாக்டர் ஹமத் சைஃப் அல் ஷம்சி, உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டு, சந்தேக நபர்களை அவசர விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
30 பேர் கொண்ட புலனாய்வாளர்கள் குழுவின் தலைமையிலான விசாரணையில், அவர்கள் பொது இடங்களில் கூடி, அமைதியின்மையைத் தூண்டி, பொதுப் பாதுகாப்பை சீர்குலைப்பதிலும், அத்தகைய கூட்டங்கள் மற்றும் போராட்டங்களை ஊக்குவித்தல், இந்த செயல்களின் ஆடியோ காட்சிகளை ஆன்லைனில் பதிவு செய்தல் மற்றும் பரப்புதல் போன்றவற்றில் ஈடுபட்டதை உறுதி செய்த பின்னர், அவர்கள் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டனர். வங்க தேச அரசாங்கத்தின் முடிவுகளுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு தெருக்களில் இவர்கள் கூடி பெரிய அளவிலான அணிவகுப்புகளை ஏற்பாடு செய்ததை உறுதிப்படுத்திய ஒரு சாட்சியை நீதிமன்றமும் விசாரித்தது. இது கலவரங்கள், பொது பாதுகாப்புக்கு இடையூறு, சட்ட அமலாக்கத்திற்கு இடையூறு மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் போராட்டக்காரர்களை போலீசார் எச்சரித்தும், கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டும், அவர்கள் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்றம் அவர்களின் குற்றத்திற்கான போதுமான ஆதாரங்களைக் கண்டறிந்து, அதன்படி அவர்களுக்கு தண்டனை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel