ADVERTISEMENT

வெளிநாட்டவர்களுக்கான சிறந்த நாடுகளில் அமீரகம்.. 76% பேரின் வேலை வாய்ப்பில் முன்னேற்றம்.. ஆய்வின் முடிவில் தகவல்..!!

Published: 5 Jul 2024, 10:16 AM |
Updated: 5 Jul 2024, 10:33 AM |
Posted By: admin

ஒரு நாட்டில் உள்ளவர்கள் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது. இதில் உலகளவில் வாழ்வதற்கு சிறந்த மற்றும் வேலை, பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளே பெரும்பாலானோர் விரும்பி செல்லக்கூடிய நாடுகளாக இருக்கும். இந்த நாடுகள் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய ஆய்வின்படி, 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் ஐக்கிய அரபு அமீரகம் உலகின் சிறந்த நாடுகளில் முதல் 10 நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகாரத்துவ தடைகள், கடுமையான சட்ட நெறிமுறைகள் மற்றும் சிக்கலான குடியேற்றச் சட்டங்கள் போன்றவை இல்லாமல் ‘Expat essential index’ பிரிவில் அமீரகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான தகவலில் “எங்கள் தரவரிசையில் மற்ற எல்லா நாடுகளையும் விட ஐக்கிய அரபு அமீரகம் ‘எக்ஸ்பாட் எசென்ஷியல்ஸ் இன்டெக்ஸ்’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அத்துடன் மொழி மற்றும் நிர்வாக தலைப்புகள் பிரிவுகளிலும் நாடு முதலிடத்தில் உள்ளது. அரபு மொழியைக் கற்றுக்கொள்வது எளிதானதும் இல்லை, கடினமானதும் இல்லை என்று கருதப்பட்டாலும், 80 சதவீத வெளிநாட்டவர்கள் அதைக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஒப்புக்கொள்கிறார்கள்” என்று 2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய நெட்வொர்க் இன்டர்நேஷனின் (global network InterNations) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகமானது மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக, பொதுத் துறையில் இருந்து அதிகளவு நெறிமுறைகளை அகற்றுவதற்கான சீர்திருத்தங்களை தீவிரமாகப் பின்பற்றி வருகிறது. கடந்த பிப்ரவரியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், “ஜீரோ கவர்ன்மெண்ட் அதிகாரத்துவத் திட்டம் (Zero Government Bureaucracy Programme)” என்று அழைக்கப்படும் புதிய முயற்சிகளை அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் ஓராண்டுக்குள் 2,000 நடைமுறைகளை நீக்கி நூற்றுக்கணக்கான அரசு சேவைகளை மறுசீரமைக்க வேலை செய்யும் என கூறப்பட்டிருந்தது.

76% வெளிநாட்டவர்களின் தொழில் முன்னேற்றம்

வெளிநாட்டவர்கள் அமீரக பொருளாதாரம் குறித்து கூறுகையில் அமீரகத்தில் தற்போதைய பொருளாதாரத்தின் நிலை (1வது) மற்றும் உள்ளூர் வேலைச் சந்தை (4வது) குறித்து பாராட்டு தெரிவித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. அதாவது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவது அவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளது என்பதை 76 சதவீத வெளிநாட்டினர் ஒப்புக்கொள்கிறார்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் அதிக சதவீதமும், உலக சராசரியை விட 20 சதவீத புள்ளிகளும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

கூடுதலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 64 சதவீத வெளிநாட்டினர் அமீரகத்தில் தங்குமிடம் பெறுவது எளிதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது உலகளவில் உள்ள 45 சதவீதத்தை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமீரகத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை உயர்வு ஒரு சவாலாக உள்ளது என்றும் இதனால் 37 சதவீத வெளிநாட்டவர்கள் மட்டுமே இந்த விலையில் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் தரத்தில் மூன்றாவது இடம்

ஐக்கிய அரபு அமீரகம் ஒட்டுமொத்த தரவரிசையில் 10வது இடத்தையும், உலகளவில் 53 நாடுகளில் வாழ்க்கைத் தரத்தில் மூன்றாவது சிறந்த இடத்தையும் பெற்றுள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரத்தில், Numbeo நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வாழ்க்கை தரத்தில் அபுதாபி 17 வது இடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் 54 வது இடத்தைப் பிடித்தது. இதேபோல், துபாயின் நிலையும் ஜனவரி-ஜூன் 2024 இல் 178 நகரங்களில் 57 வது இடத்தில் இருந்து 49 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் 86 சதவீதம் பேர் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ளதாகவும், இது உலகளாவிய சராசரியான 61 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணம் மற்றும் போக்குவரத்து பிரிவில் வரும்போது, கார்கள் மட்டுமின்றி பொதுப் போக்குவரத்து கிடைப்பதும் அமீரகத்தில் மேம்பட்டுள்ளது என்று இன்டர்நேஷனல் சர்வே கண்டறிந்துள்ளது.

உயர் பாதுகாப்பு

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துணைப்பிரிவு, அரசியல் ஸ்திரத்தன்மை போன்றவற்றில் உலகளவில் 59 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 86 சதவீதம் என ஐக்கிய அரபு அமீரகம் சிறந்த உயர்தர மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. ஒரு பெண் இரவில் தனியாக நடந்து செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான நாடாக அமீரகம் உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் தனிப்பட்ட பாதுகாப்பில் 4 வது இடத்தை அமீரகம் பிடித்துள்ளது என்றும் கலாச்சாரம் மற்றும் இரவு வாழ்வில் 3வது இடத்தையும் பிடித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகள்

ஐக்கிய அரபு அமீரகம் தவிர பனாமா, மெக்சிகோ, இந்தோனேசியா, ஸ்பெயின், கொலம்பியா, தாய்லாந்து, பிரேசில், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகியவை ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. குவைத், துருக்கி, பின்லாந்து, ஜெர்மனி, கனடா, நார்வே, இத்தாலி, மால்டா, அயர்லாந்து மற்றும் UK ஆகியவை சர்வதேச நாடுகளின் 2024 கணக்கெடுப்பில் வெளிநாட்டினரால் மோசமான தரவரிசையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel