அமீரக செய்திகள்

துபாய், அபுதாபியில் இந்த ஆண்டு அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு..!! ஆய்வில் தகவல்..!!

மற்ற வளைகுடா நாடுகளைக் காட்டிலும் அமீரகத்தில் தங்குவதற்கு living cost என்று சொல்லக்கூடிய ‘ஒரு இடத்தில் நாம் வசிப்பதற்கு ஆகக்கூடிய செலவுக்கு’ அதிகளவு பணம் தேவைப்படுகின்றது. இருந்த போதிலும் ஒவ்வொரு ஆண்டிலும் அமீரகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்நிலையில் இந்த ஆண்டில் அமீரகத்தில் இந்த செலவானது கூடியிருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அதாவது 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்க்கை தரம் இதற்கு முந்தைய காலத்தைக் காட்டிலும் உயர்ந்துள்ள போதிலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய தரவுத்தள வழங்குநரான Numbeo வெளியிட்டுள்ள தகவலின் படி, வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் துபாயின் தரவரிசை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 138 வது இடத்திலிருந்து 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியின் முடிவில் 70 வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது துபாயில் வசிப்பதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் தற்பொழுது அதிகளவு பணம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜனவரி மாதத்தில் அபுதாபி தரவரிசை குறியீட்டில் 164 வது இடத்தில் இருந்த நிலையில் தற்போழுது 75 வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பணவீக்கம் உலகளாவிய காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஏனெனில் நாடு மற்ற நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக விலைகளுடன் சீரமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் விலையினால், ஜனவரியில் லிட்டருக்கு 2.71 திர்ஹம்ஸில் இருந்து மே மாதத்தில் 3.22 திர்ஹம்ஸாக உயர்ந்துள்ளது.

இவை மட்டுமல்லாமல் தொற்றுநோய்க்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்குவதற்குண்டான வாடகைகள் அதிகரித்து வருகின்றன என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில் வெளிநாட்டு தொழில் வல்லுநர்கள் மற்றும் அதிக வசதி படைத்த நபர்களின் வருகை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மே 2024 க்கான சொத்து கண்காணிப்பு அறிக்கையின்படி, துபாயின் முக்கிய இடங்களுக்கான வாடகை சந்தையில், தொற்றுநோய்க்குப் பின் சில பகுதிகளில் விலை இருமடங்கு அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் நிலத் துறையின் தரவுகளின்படி, மே 2024 வரையிலான ஆண்டில் வாடகைப் பதிவுகளின் எண்ணிக்கை மொத்தம் 255,178 ஐ எட்டியுள்ளது என்றும், இது முந்தைய ஆண்டை விட 5.9 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் தரம்

2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இரு எமிரேட்டுகளும் தங்கள் வாழ்க்கைத் தரவரிசையில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை தரத்தை பொறுத்தவரையில் 2024 முதல் பாதி முடிவில் 178 நகரங்களில் அபுதாபி 17வது இடத்தில் உள்ளது, இது ஆண்டின் தொடக்கத்தில் 54வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் துபாயின் நிலை 57 வது இடத்தில் இருந்து 49 வது இடத்திற்கு முன்னேறியதாக கூறப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க உலக வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான வருமான அளவின்படி அதன் சமீபத்திய நாடு வகைப்பாட்டை வெளியிட்டது. அதில் கனடா, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா, சவுதி அரேபியா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தையும் தரவரிசைப்படுத்தியுள்ளது. பாதுகாப்பின் அடிப்படையில், அபுதாபி மீண்டும் உலகின் பாதுகாப்பான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தோஹா மற்றும் துபாய் ஆகிய நகரங்கள் தரவரிசையில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!