துபாயின் டாக்ஸி துறையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகளவு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 2024-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 400,000 பயணங்கள் அதிகரித்துள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 55.7 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இது 2023ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 55.3 மில்லியன் பயணங்களாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கையும் 2024 இல் 96.2 மில்லியனில் இருந்து 96.9 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று RTA தெரிவித்துள்ளது.
அதே போல் கடந்த ஆண்டு 26,000 ஆக இருந்த டாக்ஸி ஓட்டுநர்களின் எண்ணிக்கை தற்போது 30,000 ஆக அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இயக்கப்பட்ட மொத்த டாக்சிகளின் எண்ணிக்கை 12,778 ஐ எட்டியுள்ளது, இது 2023 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 644 அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து RTA-வின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷக்ரி கூறுகையில் “ஹலா டாக்ஸியின் (hala taxi) இ-ஹெய்ல் சேவை மூலம் டாக்ஸி துறை சாதனை வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் துபாயில் மேற்கொள்ளப்பட்ட மொத்த டாக்ஸி பயணங்களின் எண்ணிக்கையில் 40 சதவிகிதம் ஈ-புக்கிங் (e-booking) ஆகும். இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஐந்து சதவிகிதம் அதிகமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இவற்றில் 76 சதவிகித ஹலா பயணங்கள் சராசரியாக இருந்தன. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 3.5 நிமிடங்களுக்கும் குறைவான வாகனங்களின் வருகை நேரத்தினால், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் எட்டப்பட்ட 73 சதவீத விகிதத்தையும் விட அதிக சதவீதத்தை பெற்றுள்ளது. இது வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயல்திறன் மற்றும் பதிலில் முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel