பொதுப் போக்குவரத்தில் தனித்துவமாக விளங்கும் துபாய் மெட்ரோ சேவையானது துபாய்வாசிகள் பெரும்பாலானோருக்கு பிடித்தமான மற்றும் எளிதான போக்குவரத்தாக இருந்து வருகிறது. தற்பொழுது ரெட், கிரீன் என இரு வழித்தடங்களில் இயங்கி வரும் துபாய் மெட்ரோவில் விரைவில் புளூ லைன் இணைக்கப்படும் என்றும் அந்த வழித்தடத்தில் 14 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் துபாய் நிர்வாகக் குழுவால் ஞாயிற்றுக்கிழமை ஒரு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, துபாய் மெட்ரோ சேவையானது வரும் சில ஆண்டுகளில் பயணிகளுக்கு கூடுதல் நிலையங்களை வழங்குவதன் மூலம் துபாய் மெட்ரோ விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்பொழுது இயங்கி வரும் மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 140 சதுர கிலோமீட்டருக்கு மேல் 96 நிலையங்களாக உயர்த்துவதை இந்த விரிவாக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த எண்ணிக்கையானது 2040ஆம் ஆண்டுக்குள் 228 சதுர கிலோமீட்டருக்கு மேல் உள்ள 140 நிலையங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டமானது துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் மற்றும் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் ஆகியோரின் பார்வையின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தின் பங்கை 45 சதவீதமாக அதிகரிப்பது, தனிநபர் கார்பன் வெளியேற்றத்தை 16 டன்னாகக் குறைப்பது, நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் பொது இடங்களின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் நிழலான பகுதிகளை அதிகரிப்பது ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்றும், பொருளாதார வாய்ப்புகளை வளப்படுத்துதல், பொதுப் போக்குவரத்தை ஒன்றோடொன்று இணைக்கும் முறைகள் மற்றும் நிலையான போக்குவரத்தின் செயல்திறன் மற்றும் வசதியை மேம்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
மெட்ரோ மேம்பாட்டுத் திட்டத்துடன் கூடுதலாக, இந்த கவுன்சிலானது வெளிநாட்டு நேரடி முதலீட்டு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இதன் மூலம் வரும் 2033 ஆம் ஆண்டுக்குள் துபாய்க்கு 650 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாக இத்திட்டம் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சர்வதேச நிறுவனங்களும் மற்றும் ஏற்கெனவே துபாயில் இருக்கக்கூடிய சர்வதேச நிறுவனங்களை ஆதரவு அளிப்பதும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு நேரடி ஆதரவாக 10 ஆண்டுகளில் 25 பில்லியன் திர்ஹம்ஸை நியமிப்பதன் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், இதன் மூலம் துபாய் 2033 க்குள் உலகின் முதல் மூன்று பொருளாதார நகரங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel