துபாயை மையமாக கொண்டு இயங்கி வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கோடை சீசனை முன்னிட்டு துபாய் வரும் பயணிகளுக்கு 5-ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கான சலுகையை அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 1 முதல் 21 வரை வாங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கே இந்த சலுகை செல்லுபடியாகும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் முதல் அல்லது வணிக வகுப்பு ரிட்டர்ன் டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகள் துபாயில் உள்ள JW Marriott Marquis Hotel-ல் இரண்டு இரவுகள் தங்கி மகிழலாம் என்றும் பிரீமியம் எகானமி அல்லது எகானமியில் முன்பதிவு செய்பவர்கள் ஒரு இரவு தங்கும் வசதியைப் பெறலாம் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஜூலை 4 முதல் செப்டம்பர் 15 வரையிலான நாட்களில் பயணம் செய்வதற்கான அனைத்து ரிட்டர்ன் டிக்கெட்டுகள் அல்லது 24 மணி நேரத்திற்கும் மேலாக துபாயில் தங்கக்கூடிய பயணிகளுக்கு இந்த சிறப்பு சலுகை செல்லுபடியாகும்” என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் விமான நிறுவனத்தின் இணையதளம், அப்ளிகேஷன், டிக்கெட் அலுவலகங்கள் அல்லது டிராவல் ஏஜென்ட் மூலம் பயணிகள் வருவதற்கு குறைந்தபட்சம் 96 மணிநேரம் முன்னதாக செய்த முன்பதிவுகளுக்கு இந்த சலுகை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் வழங்கப்பட்டவுடன், பயணிகள் தங்களின் வருகையை உறுதிப்படுத்த பயணிகள் விவரங்களுடன் emiratesoffer@emirates.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை ஹோட்டல் கிடைக்கவில்லை என்றால், விமான நிறுவனம் அதே போல் ஸ்டார் ரேட்டிங்கை கொண்டிருக்கும் மற்றொரு ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் துபாயில் கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகை குறித்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் துணைத் தலைவரும், தலைமை வணிக அதிகாரியுமான அட்னான் காசிம் கூறுகையில் நகரின் வருடாந்திர பொழுதுபோக்கு, சம்மர் ஷாப்பிங் ஃபெஸ்டிவல், துபாய் கோடைகால செயல்பாடுகள் போன்றவற்றுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாய் பயணிக்கும் பயணிகளுக்கு இலவச ஹோட்டல் தங்கும் வசதிகளை வழங்கி அவர்களின் பயணத்தை சிறப்பாக்க இதன் மூலம் உதவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel