ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சுற்றுலாவிற்காக அமீரகத்தில் வரும் நபர்கள் தங்கள் விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது ஹெல்த் இன்சூரன்ஸ் எனும் சுகாதார காப்பீடு பெறுவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) அறிமுகம் செய்துள்ள இந்த ‘சுற்றுலா விசாக்களுக்கான சுகாதார காப்பீடு’ அதன் புதிய திட்டங்களில் ஒன்றாகும் என கூறப்பட்டுள்ளது.
ICP இணையதளம் அல்லது அப்ளிகேஷன் மூலம் ஆன்லைனில் விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் போது சுற்றுலாப் பயணிகள் ஹெல்த் இன்சூரன்ஸை பெற இந்தத் திட்டம் உதவும் என்று ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி கூறியுள்ளார். மேலும் இந்த திட்டமானது அவசர காலங்களில் சுகாதார பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து முக்கிய காப்பீட்டு நிறுவனங்களின் தொகுப்புகளின் “விலை மற்றும் வெளியீட்டை நிர்வகிக்கும்” மின்னணு தளத்தின் மூலம் இந்த ஹெல்த் இன்சூரன்ஸை பெறுவதற்கான செயல்முறை தானியங்குபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்தான தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel