ADVERTISEMENT

அபுதாபியில் இருந்து திருச்சி, கோவைக்கு நேரடி விமான சேவையை அறிவித்த இண்டிகோ..!! துவங்கிய டிக்கெட் புக்கிங்..!!

Published: 20 Jul 2024, 9:35 AM |
Updated: 20 Jul 2024, 11:01 AM |
Posted By: admin

இந்தியாவைச் சேர்ந்த பட்ஜெட் கேரியரான இண்டிகோ விமான நிறுவனம் அடுத்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு கூடுதலாக மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதில் இரண்டு விமான சேவைகள் தமிழகத்திற்கு இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த ஊருக்கு குறைந்த டிக்கெட் விலையில் பயணிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என கூறப்பபட்டுள்ளது.

ADVERTISEMENT

விமான நிறுவனம் அறிவித்துள்ளதன் படி ஆகஸ்ட் முதல் அபுதாபி மற்றும் தென்னிந்திய நகரங்களான மங்களூரு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி இடையே நேரடி விமான சேவைகளை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியிலிருந்து மங்களூரு வழித்தடத்தில் உள்ள விமானங்கள் ஆகஸ்ட் 9 முதல் தினமும் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், திருச்சிக்கு வாரத்திற்கு நான்கு முறை விமான சேவைகள் என்பதன் அடிப்படையில், ஆகஸ்ட் 11, 2024 முதல் விமானங்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதே போல் கோயம்புத்தூர் மற்றும் அபுதாபி இடையே நேரடி விமானங்கள் ஆகஸ்ட் 10 முதல் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருந்து கோயம்புத்தூர் மற்றும் திருச்சிக்கு வரவிருக்கும் மாதங்களில்  330 திர்ஹம்ஸ் (7,500 ரூபாய்) என ஒரு வழி விமானக் கட்டணத்தை விமான நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. மேலும் அமீரகத்திற்கு திரும்புவதற்கான அமீரக பயணிகளின் விமானக் கட்டணம் 843 திர்ஹம்ஸ் என்ற அளவில் குறைவாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இருக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் ஆகும். கிட்டத்தட்ட 3.7 மில்லியன் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்றனர். இதன் காரணமாக பொதுவாகவே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான விமானப் பாதை இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் பரபரப்பான ஒன்றாகும்.

இதன் மூலம் ஏற்பட்டுள்ள வலுவான விமானப் பயணத் தேவையினால், இரு நாடுகளுக்கும் இடையேயான விமானக் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் கோடை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை போன்ற போக்குவரத்து அதிகமுள்ள பருவங்களில் டிக்கெட் விலையானது இரட்டிப்பாகும். இவ்வாறு அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப இருக்கை திறனை அதிகரிக்குமாறு பயணத் துறை நிர்வாகிகள் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது இண்மிகோ விமான நிறுவனமானது கூடுதல் விமான சேவைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா கூறுகையில், “இந்த விமானங்களின் சேர்க்கையுடன், IndiGo இப்போது இந்தியாவில் உள்ள 13 நகரங்களில் இருந்து அபுதாபிக்கு வாரத்திற்கு 89 விமானங்களை இயக்குகிறது. விமான நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் பயண அனுபவத்தை வழங்கும்” என்று கூறியுள்ளார். ஜனவரியில், இந்த விமான நிறுவனம் அதன் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களிலும் எரிபொருள் கட்டணத்தை நீக்குவதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel