ADVERTISEMENT

துபாயில் அமைக்கப்படவுள்ள புதிய ‘Silent Radars’.. இந்த கேமராவில் பிடிபட்டால் ஃப்ளாஷ் வராது..

Published: 25 Jul 2024, 6:50 PM |
Updated: 25 Jul 2024, 6:54 PM |
Posted By: admin

அமீரகத்தில் வாகன ஓட்டிகள் விதிமீறல்கள் புரிவதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள ரேடார்கள் பொதுவாக சாலைகளில் இருக்கும் நிலையில் துபாய் காவல்துறையானது மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புதிய ரேடார்களை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Silent Radar’ என சொல்லக்கூடிய இந்த புதிய ரேடார்கள் எப்போதும் பயன்படுத்தப்படும் ரேடார்களைப் போல இருக்காது என கூறப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக ரேடார்களில் வாகனங்கள் விதிமீறல் புரியும் போது புகைப்படம் எடுத்ததற்கான ஃப்ளாஷ் வரும். ஆனால் இந்த புதிய ரேடார்கள் விதிமீறலை கண்டறியும் போது வாகன ஓட்டிகள் எவ்வித வித்தியாசத்தையும் கண்டறிய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிவதுடன் கூடுதலாக சீட் பெல்ட் அணிவது மற்றும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது போன்ற சரியான பாதுகாப்பு நடைமுறைகளைப் பராமரிக்க ஓட்டுநர்களை ஊக்குவிப்பதே புதிய ரேடார்கள் அமைப்பதற்கான நோக்கம் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் சைலண்ட் ரேடார்கள் எப்போது அமைக்கப்படும் என்பது உடனடியாகத் தெரியவில்லை.  

அதே சமயத்தில் சில குடியிருப்பாளர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துகிறார்கள் அல்லது தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் போது விரைவாக வாகனம் ஓட்டுகிறார்கள். இருப்பினும், குடியிருப்பு பகுதிகளுக்குள் வாகனம் ஓட்டினாலும் போக்குவரத்து சட்டம் பொருந்தும். இதனடிப்படையில் சீட் பெல்ட்டை அணிய தவறினால் 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படலாம், அதே சமயம் வாகனம் ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்தினால் 800 திர்ஹம் அபராதம் மற்றும் 4 பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படலாம்.

ADVERTISEMENT

இது தொடர்பாக போக்குவரத்து விழிப்புணர்வுப் பிரிவின் தலைவரான சல்மா முகமது ரஷீத் அல்மரி கூறியதாவது: “துபாய் காவல்துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகள் தொலைபேசிகளை வைத்திருப்பது மற்றும் சீட் பெல்ட் அணிவது போன்ற குறிப்பிட்ட மீறல்களுக்கான அபராதங்களை விதிக்கும் போது இருமுறை சரிபார்க்கும்” என தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஹசன் அலி தலேப் அல்ஹமர் கூறுகையில் “பலர் ரேடார்கள் அதிவேகத்தில் சென்றால் மட்டுமே கண்டுபிடிப்பதாக நினைக்கிறார்கள், ஆனால், சட்டவிரோதமாக எடுக்கப்படும் யு-டர்ன்கள் மற்றும் பிற போக்குவரத்து மீறல்களையும் ரேடார் கண்டறியும்” என கூறியுள்ளார். 

ADVERTISEMENT

துபாயின் சாலைகள் இந்த அதிநவீன ரேடார்கள் மட்டுமின்றி, துபாய் போலீஸ் கட்டளைக் கட்டுப்பாட்டு மையத்திற்குள் இருக்கும் பிரமாண்ட திரைகளாலும் கண்காணிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மையத்தின் உதவி இயக்குநர் மேஜர் முகமது ஷாஹ்ரியார் அல்புலோஷி விளக்கியதாவது: துபாய் போலீஸ் கமாண்ட் சென்டரில் இருந்து, சாலையில் ஏதேனும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறதா, போக்குவரத்து நெரிசலுக்கு என்ன காரணம், ஏதேனும் ஓட்டுநருக்கு உதவி தேவைப்படுகிறதா என்பதை நாங்கள் கேமரா மூலம் சரிபார்த்து ஒரு போலீஸ் ரோந்துப் படையை நேரடியாக அனுப்பி, கட்டளை மையத்தில் இருந்து நிலைமையை மேற்பார்வை செய்து மதிப்பீடு செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதிலும் பல ஓட்டுநர்கள் இந்த ரேடார்களின் இருப்பிடத்தை அறிந்திருப்பதாகவும், அதற்கேற்ப வேகத்தைக் குறைப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளது. எவ்வாறாயினும், விதிமீறல்களை புரியும் ஓட்டுநர்களைப் பிடிப்பதை விட, நிலையான மற்றும் பாதுகாப்பான ஓட்டும் வேகத்தை பராமரிப்பதே ஆணையத்தின் முதன்மையான அக்கறையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel