அமீரகத்தில் இருக்கும் வாகன ஓட்டிகள் கடைகளில் ஏதாவது பொருட்களை வாங்குவதற்கோ, அல்லது ATM செல்லுதல் போன்ற வேறு ஏதேனும் தேவைகளுக்காகவோ தங்களின் வாகனங்களை முறையான பார்க்கிங் செய்யாமல் ஆங்காங்கே வாகனங்களின் என்ஜீனை ஆஃப் செய்யாமல் பார்க் மோடில் (park mode) நிறுத்தி விட்டு செல்வது வழக்கமாகும். பார்க்கிங் கிடைப்பதில் சிரமம் அல்லது சில நிமிட வேலைக்காக வாகனங்களின் என்ஜீனை ஆஃப் செய்ய வேண்டாம் என நினைத்து வாகன ஓட்டிகள் இவ்வாறு செயல்படுகின்றனர்.
இந்நிலையில் அபுதாபி காவல்துறையானது ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை விட்டு வெளியேறும்போது அவர்களின் கார் என்ஜீன்களை இயக்கத்திலேயே வைத்திருப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு விழிப்புணர்வு வீடியோவில், பெட்ரோல் நிலையங்கள், ATM அல்லது மசூதிகளில் நிறுத்தும் ஓட்டுநர்களிடையே இது போன்ற பொதுவான நடைமுறை இருப்பதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து கூறுகையில் ”உணவு வாங்க அல்லது பணம் எடுப்பது போன்ற செயல்களுக்கு அதிக நேரம் எடுக்காது என்பதால், அவர்கள் தங்கள் வாகனங்களை பார்க் மோடில் விட்டுவிடுவார்கள், ஆனால் என்ஜின் இயங்கும் நிலையிலேயே இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். இத்தகைய நடைமுறையானது கார் தீ பிடிப்பதற்கு அல்லது திருடப்படுவதற்கு வழிவகுக்கும்” என்று போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ரோந்து இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
அத்துடன் “தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்துவதைத் தவிர்க்கவும். நீங்கள் சாலையில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். வாகனத்தின் என்ஜீனை இயக்கத்திலேயே வைத்து விட்டு வாகனத்தை விட்டுச் செல்ல வேண்டாம்,” என்று ஆணையம் கூறியுள்ளது. மேலும் போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்க தவறினால் 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel