ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை காலத்தை முன்னிட்டு கடும் வெயில் கொளுத்தும் நிலையில் அமீரகவாசிகள் அனைவரும் எப்போது குளிர்காலம் ஆரம்பிக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிறிது நேரம் கூட வெளியில் நிற்க முடியாத அளவிற்கு அதிகளவு வெயில் அமீரகத்தில் நிலவி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் முன்னெப்போதும் இல்லாதளவிற்கு இந்த வருடம் 50 டிகிரியை தாண்டி வெப்பநிலையானது அமீரகத்தில் பதிவாகியுள்ளது.
தற்பொழுது அமீரகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அமீரகத்தில் நிலவும் வெயிலில் இருந்து தப்பிக்க இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொண்டு அமீரகத்தில் இருக்கும் குடும்பத்தினர் விடுமுறைக்கு மற்ற நாடுகளுக்கு சுற்றுலா அல்லது சொந்த ஊர்களுக்கு செல்வது என விடுமுறையை கழிக்கின்றனர்.
அதே நேரத்தில் அமீரகத்தில் இருப்பவர்களோ தினந்தோறும் வெயிலை எண்ணி நொந்து கொண்டே ஒவ்வொரு நாளையும் கழித்து வருகின்றனர். இதில் திறந்தவெளி அல்லது கட்டிட வேலை பார்ப்பவர்களின் நிலைமையோ கேட்க வேண்டியதில்லை. அரசு இவர்களுக்கு மதியம் 12.30 மணி முதல் மதிய வேலை தடை அறிவித்து இருந்தாலும் காலையிலேயே உச்சி வெயில் போல வெப்பநிலை அமீரகத்தில் இருக்கின்றது. வெளியில் தான் இப்படி, தங்களின் அறைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தால் இந்த வெயில் காலத்தில் பலரின் வீடு மற்றும் அறையில் இருக்கும் AC-யானது அடிக்கடி பழுதடைந்து இருக்கின்ற சூழலை மிகவும் மோசமாக்கி விடுகின்றது.
கடந்த சில நாட்களில், நாட்டின் பல பகுதிகளில் ஈரப்பதம் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. வெப்பநிலை சராசரியாக 40 டிகிரியாக இருந்தாலும், தேசிய வானிலை மையம் கடலோர மற்றும் தீவுப் பகுதிகளில் 70 சதவீதம் மற்றும் 95 சதவீதமாகவும் உள் பகுதிகளில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலும் ஈரப்பதத்தை பதிவு செய்து வருகின்றது. இதன் காரணமாக பலர் தங்களின் வீடுகளில் பல மின்னணு சாதனங்கள் பழுதடைந்து வருவதாக தெரிவித்து வருகின்றனர்.
இது போன்று துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில் நாட்டில் அதிகரித்து வரும் ஈரப்பதம் காரணமாக, குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்ததால், அதை மாற்றும் பணியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இது குறித்து கூறுகையில் “நான் காலையில் எழுந்தபோது, குளிர்சாதன பெட்டி குளிர்ச்சியடையவில்லை, என் உணவுகள் அனைத்தும் கெட்டுவிட்டன. அதைச் சரிபார்க்கும் வேளையில் என் வீட்டில் அதிக ஈரப்பதம் காரணமாக வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனர் ஒன்றும் பாழாகிவிட்டது” என்று கவலை தெரிவித்துள்ளார்.
மற்றொரு குடியிருப்பாளர் அதிகளவு ஈரப்பதம் காரணமாக அவரது சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “நான் சத்வாவிற்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன், கடுமையான ஈரப்பதம் என் சுவரில் விரிசலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக எனது பெரிய சுவர் கண்ணாடி கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக என் சோபாவை அதன் கீழ் வைத்திருந்தேன், அதனால் கண்ணாடி உடையவில்லை” என்று கூறியுள்ளார்.
12 ஆண்டுகளுக்கும் மேலாக அமீரகத்தில் வசித்து வரும் மற்றுமொரு குடியிருப்பாளர், இதுபோன்ற சிக்கலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில் “ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறேன். இந்த ஆண்டு கோடை மற்றும் ஈரப்பதம் மிக மோசமான ஒன்றாக இருப்பதாக நான் உணர்கிறேன்,” என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில் “எனது ஃபால்ஸ் சீலிங்கில் (false ceiling) இருந்து நாள் முழுவதும் தண்ணீர் சொட்டுகிறது. இதனால் வீட்டில் தண்ணீர் தேக்கம் ஏற்படாதவாறு வீடு முழுவதும் வாளிகளை வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது போலவே AC-யில் குளிர்ச்சி குறைவாக இருப்பதாகவும் அதே நேரத்தில் மின்சாரக் கட்டணம் அதிகமாக வருவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இதற்கு AC ஃபில்டரில் தூசி இருப்பது காரணமாக இருக்கும் என்றும் இதனால் அவ்வப்போது AC-யை பராமரிப்பு செய்து கொள்ளுமாறும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இவை மட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு பிரச்சனைகளை அமீரகவாசிகள் இந்த வெயில் காலத்தில் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த அதிகளவு வெப்பநிலையானது வரும் ஆகஸ்ட் மூன்றாவது வாரம் வரை நிலவும் என வானிலை மையம் கணித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel