ADVERTISEMENT

அமீரகத்தில் 50°C-ஐ தாண்டி சுட்டெரிக்கும் வெப்பநிலை..!! வெயிலின் தாக்கம் எப்போது குறையும்..??

Published: 6 Jul 2024, 8:40 AM |
Updated: 6 Jul 2024, 8:40 AM |
Posted By: admin

அமீரகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலானது தாண்டவமாடி வருகின்றது. அதிலும் இந்த வருடம் வெப்பநிலையானது 50 டிகிரி செல்சியஸையும் தாண்டி நிலவுகின்றது. இந்தளவுக்கு வெயில் கொளுத்தும் வேளையில், ஜூலை மாத நடுப்பகுதியில் கோடை காலம் உச்சம் பெறும் என்றும் எனவே அமீரக குடியிருப்பாளர்கள் இந்த வெப்பநிலையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

துபாய் வானியல் குழுமத்தின் செயல்பாட்டு மேலாளர் கதீஜா அஹ்மத் கூறுகையில் “நாட்டில் வழக்கமான வெப்பமான காலநிலையை விட இந்த ஆண்டு வெப்ப அலை மிகவும் கடுமையானது. கோடையில் அதிக வெப்பநிலையை அனுபவிப்பது பொதுவானது என்றாலும், இந்த குறிப்பிட்ட வெப்ப அலையினால் வெப்பநிலை மற்றும் அதிகளவு வெப்பநிலை நிலவும் கால அளவு ஆகிய இரண்டும் அதிகரித்துக் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

வெப்ப அலைகள் ஏற்படுவதற்கான காரணத்தை விளக்கிய துபாய் வானியல் குழுவின் அதிகாரி “மேகங்களின் பற்றாக்குறை மற்றும் கட்டிடங்களில் இருந்து வரும் நகர்ப்புற வெப்ப விளைவு ஆகியவற்றுடன் இணைந்து, வெப்பமான காற்றைப் பிடிக்கும் உயர் அழுத்த அமைப்புகளால் வெப்ப அலை ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார். அத்துடன் “இந்த தீவிர வானிலை நிகழ்வுகளை மிகவும் பொதுவானதாகவும் தீவிரமானதாகவும் மாற்றுவதில் காலநிலை மாற்றமும் பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதற்கிடையில், அமீரகத்தில் செயல்பட்டு வரும் ‘புயல் மையம் (storm center)’ தெரிவிக்கையில், “தற்பொழுது நிலவும் இந்த கோடைகாலம் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கொண்டுள்ளது. இது ஆண்டின் வெப்பமான காலங்களில் ஒன்றாகும். அத்துடன் இந்த அதிகபட்ச வெப்பநிலை சுமார் 40 நாட்கள் நீடிக்கும்” என்று கூறியுள்ளது. அதாவது கோடை காலத்தின் உச்ச நாட்கள் ஜூலை நடுப்பகுதியில் தொடங்கி ஆகஸ்ட் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் வரை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சமயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கடுமையான வெப்பத்தின் போது, ​​மருத்துவ வல்லுநர்கள் உடல்நலத்தை பாதுகாப்புடன் வைத்திருக்க குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அடிக்கடி நீராகாரம் குடித்து நீரேற்றத்துடன் இருப்பது மட்டுமல்லாமல், பொருத்தமான ஆடைகளை அணியவும் மற்றும் நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் நாளின் வெப்பமான நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel