ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக நாட்டில் லாட்டரியை இயக்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட உரிமத்தை அமீரக அரசின் கேமிங் ஆணையம் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளது. கேம் மேம்பாடு, லாட்டரி செயல்பாடுகள் மற்றும் கேமிங் துறையில் நிபுணத்துவம் பெற்ற, அபுதாபியை தளமாகக் கொண்ட வணிக கேமிங் ஆபரேட்டரான ‘தி கேம் எல்எல்சி (The Game LLC)’ எனும் நிறுவனத்திற்கு இந்த உரிமமானது வழங்கப்பட்டுள்ளது.
அமீரகத்திற்குள் ‘UAE லாட்டரி’ என்ற பெயரின் கீழ் செயல்படும் இந்நிறுவனம், லாட்டரி கேம்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பல்வேறு ஆர்வங்கள் மற்றும் நிதி விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிற விளையாட்டுகளையும் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 3, 2023 அன்று, வணிக கேமிங்கிற்கான ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்த, நாட்டின் பொது வர்த்தக கேமிங் ஒழுங்குமுறை ஆணையத்தை (GCGRA) ஒரு கூட்டாட்சி ஆணையமாக அமீரக அரசு நிறுவியது. ஒழுங்குமுறை அமைப்பு நிறுவப்படுவதற்கு முன்பு, நாட்டில் பல கேமிங் மற்றும் லாட்டரி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. அவர்களில் சிலர் ஆண்டின் தொடக்கத்தில் தங்களின் செயல்பாட்டை நிறுத்திவிட்டனர்.
வணிக கேமிங்கிற்கான ஆணையம் குறித்து அதன் உயரதிகாரிகள் தெரிவிக்கையில், நுகர்வோர் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் நியாயமான நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக அதன் கட்டுப்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக எச்சரிக்கை
ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது அனுமதியின்றி வணிக கேமிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, நடத்துவது அல்லது எளிதாக்குவது சட்டவிரோதமானது என்றும், சட்டத்தை மீறுபவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் GCGRA எச்சரித்துள்ளது. GCGRA கட்டமைப்பின் படி, உரிமம் பெறாத ஆபரேட்டர்கள் மூலம் நுகர்வோராக விளையாடுவதும் சட்டவிரோதமானதாகும்.
“UAE லாட்டரி அறிமுகமானது, லாட்டரி நடவடிக்கைகளுக்கான ஒழுக்கமான உலகத் தரம் வாய்ந்த ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுவதைக் குறிப்பது மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பான மற்றும் செறிவூட்டப்பட்ட வணிக கேமிங் சூழலை வளர்ப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்றும் GCGRA உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel