ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வரும் பட்சத்தில், கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் அமீரகத்தின் ஒரு சில இடங்களில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பலத்த மழையும், ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இதனையடுத்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) சில பகுதிகளில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தது.
நேற்று அல் அய்னின் அல் ஹில்லி, அல் ரீஃப், அன் நைஃபா, பாத் பின்த் சௌத், அல் மசூதி மற்றும் அல் நபாக் போன்ற பகுதிகளில் மழை பெய்திருக்கின்றது. மேலும், அல் தஃப்ராவின் Gasyoura பகுதியில் நேற்று ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் இந்த வானிலையானது தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை அமீரகத்தின் ஒரு சில இடங்களில் மழையும், வேகமாக வீசக்கூடிய காற்றால் தூசி ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
காற்று, தூசி அல்லது மணல், இடி, மழை, மற்றும் வெப்பச்சலன மேகங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை என்பது வெளியில் சென்றால் குடியிருப்பாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
நேற்று அமீரகத்தில் பெய்த மழை மற்றும் மின்னல் தாக்கிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் அமீரகத்தின் புயல் மையம் பகிர்ந்துள்ளதை கீழே காணலாம்.
View this post on Instagram
இதனையடுத்து இன்று அமீரகத்தில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில சமயங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கிலிருந்து வடமேற்கு திசையில் காற்று வீசும் என்றும், உள் பகுதிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகளில் மணிக்கு 35 கிமீ வேகத்திலும், மலைகளில் மணிக்கு 40 கிமீ வேகத்திலும் காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel