ADVERTISEMENT

அமீரகத்தில் இந்த 7 விதமான பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் 5 லட்சம் அபராதம் மற்றும் 5 வருட சிறை..!!

Published: 21 Aug 2024, 3:47 PM |
Updated: 21 Aug 2024, 3:47 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அமீரக குடியிருப்பாளரான நீங்கள் எப்போதாவது போலியான பதிவு அல்லது செய்தியை சமூக ஊடகங்களில் மற்றவர்களுக்கு அனுப்பியிருக்கிறீர்களா? அல்லது, சில நேரங்களில் தனிநபர்களை ஆன்லைனில் ட்ரோல் செய்து ரசித்துள்ளீர்களா? அப்படியென்றால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

ADVERTISEMENT

ஏனெனில், ஐக்கிய அரபு அமீரகத்தில் அத்தகைய நடத்தைக்காக நீங்கள் தண்டிக்கப்படலாம். அதாவது உண்மைத் தன்மையை அறியாமல் தவறான தகவல் அல்லது வதந்திகளை பொதுவெளியில் பரப்புவது, மற்றும் ஆன்லைனில் தனிநபர் ஒருவரை அவதூறாகப் பேசுவது உங்களை அமீரகத்தில் கடுமையான சிக்கலில் சிக்க வைக்கும்.

அமீரக அரசானது சமீபகாலமாக நாட்டில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விதிகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்கள் மற்றும் விளம்பரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் விளம்பரச் சேவைகளை வழங்க கூடாது என அபுதாபி புதிய தடை சட்டத்தை நிறுவியது.

ADVERTISEMENT

இந்நிலையில் தேசத்தின் விதிமுறைகள் மற்றும் சட்டங்களை மதிக்க சமூக ஊடகங்களில் அமீரக குடியிருப்பாளர்கள் தவிர்க்க வேண்டிய ஏழு விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. அதனை ஒவ்வொன்றாக கீழே காணலாம்.

1. ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி அல்லது எமிரேட்ஸ் ஆட்சியாளர்களை விமர்சித்தல் அல்லது தாக்குதல்

ADVERTISEMENT

2. நாட்டின் ஆட்சி முறையை விமர்சிப்பது அல்லது தாக்குவது அல்லது அரசின் உயர் நலன்களுக்கு தீங்கு விளைவித்தல்.

3. வதந்திகளைப் பரப்புவதன் மூலமோ அல்லது தவறான செய்திகளைப் பகிர்வதன் மூலமோ நாட்டின் பொருளாதார அமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்.

4. பொது ஒழுக்கத்தை மீறும், சிறார்களை அவமதிக்கும் அல்லது அழிவுகரமான கொள்கைகளை ஊக்குவிக்கும் கருத்துக்களை சமூக ஊடக பக்கங்களில் பதிவிடுதல்.

5. நாட்டில் நீதிமன்றங்கள் அல்லது ஒழுங்குமுறை அமைப்புகளின் விவாதங்கள் அல்லது பொது அமர்வுகளை சிதைக்கும் வகையில் பதிவிடுதல்.

6. வேண்டுமென்றே ஒருவரை பற்றி தவறான செய்திகளை பரப்புதல், போலியான அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஆவணங்களை பகிர்தல், அல்லது ஒருவரை பற்றி பிறரிடம் பொய்யாகக் கூறுதல்.

7. பதவியில் உள்ள ஒரு பொது அதிகாரி அல்லது பொது பிரதிநிதி ஒருவரின் செயல்களை விமர்சித்தல்.

மேற்கூறியவற்றின் அடிப்படையில் நாட்டின் நற்பெயர், கௌரவம் அல்லது அந்தஸ்தைக் கேலி செய்யும் நோக்கத்துடன் ஆன்லைனில் தகவல், செய்தி, காட்சிப் பொருட்கள் அல்லது வதந்திகளை வெளியிட்டால், உங்களுக்கு 500,000 திர்ஹம் வரை அபராதம் அல்லது அபராதத்துடன் சேர்த்து 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel