ADVERTISEMENT

அபுதாபி: சாலை நடுவில் கார் பழுதாகி விட்டதா..?? இலவச உதவியை பெறுவது எப்படி..??

Published: 21 Aug 2024, 7:06 PM |
Updated: 21 Aug 2024, 7:24 PM |
Posted By: admin

பொதுவாக வாகனம் வைத்திருக்கும் நபர்கள் தங்களின் வாகனங்களை ஓட்டுவதற்கு தயாராகும் முன் வாகனங்களின் ஹெட்லைட்கள், இன்ஜினில் இருந்து டயர்கள் வரை நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இருப்பினும், எதிர்பாராத நேரத்தில் சில நேரங்களில் வாகனங்களில் திடீரென பழுது ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒரு சில நேரங்களில் வாகனம் பிரேக் டவுன் ஆகி செயலிழந்து விட்டால் வாகனங்களுக்குள் இருப்பவர்களின் நிலையோ மோசமாக இருக்கும்.

ADVERTISEMENT

அதிலும் அமீரக சாலையென்றால் சொல்ல தேவையில்லை. சாலையில் திடீரென வாகனம் பழுதாகி விட்டால் அமீரகத்தில் நிலவும் வெப்பநிலைக்கு வாகனம் மீண்டும் செயல்படும் வரையிலும் அல்லது மற்றவர்களின் உதவி கிடைக்கும் வரையிலும் வாகனத்திற்குள்ளேயோ அல்லது சாலைகளில் நிற்பதோ மிகவும் சிரமமான காரியமாகும்.

இருப்பினும் நெடுஞ்சாலையின் நடுவில் வாகனம் பழுதாகி சிரமங்களை எதிர் கொண்டால், முதலில் நாம் செய்ய வேண்டியது பதட்டப்படாமல் அமைதியாக இருப்பதாகும். ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில், அதிகாரிகள் எப்போதும் உதவத் தயாராக இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

அபுதாபியை பொறுத்தவரை, ​போலீஸ் ​ரோந்துக் குழுக்கள் மக்களுக்கு எந்த நேரத்திலும் உதவ தயாராக இருக்கின்றன. அபுதாபி மொபிலிட்டி (AD Mobility), அபுதாபியின் போக்குவரத்து ஆணையம், அதன் சாலை சேவை ரோந்து (Road Service Patrol, RSP) மூலம் 24 மணிநேரமும் இலவச சாலையோர உதவியை வழங்குகிறது. அபுதாபியில் நீங்கள் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டால் எவ்வாறு இலவச சேவையை பெறுவது என்பதை கீழே காணலாம்.

  • உங்கள் காரில் ஏதோ தவறு இருப்பதாக நீங்கள் உணர்ந்தவுடன், உங்களால் முடிந்தால் உங்கள் கார் சாலையின் ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
  • உங்கள் அபாய விளக்குகளை (hazard lights) இயக்கவும்.
  • 800850க்கு டயல் செய்து அதிகாரியிடம் உங்கள் நிலைமையை விளக்கவும். அதனுடன் உங்கள் சரியான இருப்பிடத்தையும் பகிர வேண்டும்.

இது தவிர, இந்த சேவையைக் கோருவதற்கான மற்றொரு வழி, அபுதாபி எமிரேட்டுக்கான பயண வழிகாட்டி அப்ளிகேஷனான தர்பி (Darbi) செயலி ஆகும். இந்த மொபைல் ஆப்பில் இருக்கும் ‘+’ பொத்தானைக் கிளிக் செய்து மெனுவை திறக்கவும். அதில் மூன்றாவது விருப்பமான RSP- யை தேர்ந்தெடுக்கவும். உதவி கேட்க, படிவத்தைப் பூர்த்தி செய்து உங்கள் இருப்பிடத்தை அதில் குறிப்பிடவும். 

ADVERTISEMENT

RSP-ன் சேவைகள்

  • கார் சேதமடைந்தாலோ அல்லது பழுதடைந்தாலோ ரோந்து வாகனத்தால் உங்கள் வாகனத்தை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்ல முடியும்.
  • எரிபொருள் தீர்ந்தால் போதுமான பெட்ரோலை உங்களுக்கு வழங்க முடியும். இதன் மூலம் நீங்கள் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தை அடையலாம்.
  • டயரில் பழுது ஏற்பட்டால் அதை மாற்றுவதற்கு அதிகாரிகளால் உங்களுக்கு உதவ முடியும்.
  • வாகனத்தின் பேட்டரி காலியாகி விட்டால் ரீசார்ஜ் செய்வதற்கான வசதி இருக்கும். எனவே பழுதுபார்க்கும் கடைக்கு காரை விரைவில் எடுத்துச் செல்லலாம்.

பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்ட RSP, எமிரேட்டில் உள்ள அனைத்து சாலைப் பயனர்களுக்கும் கிடைக்கிறது. இருப்பினும், இது அபுதாபியின் முக்கிய சாலைகளுக்கு மட்டுமே ஆகும். உதவி வழங்குவதைத் தவிர, அபுதாபியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கான போக்குவரத்து ஓட்டத்தையும் RSP ஏற்பாடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel