துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று (வெள்ளிக்கிழமை) எக்ஸ்போ 2020 மெட்ரோ நிலையம் மற்றும் UAE எக்ஸ்சேஞ்ச் மெட்ரோ நிலையம் ஆகியவற்றிற்கான தனித்தனி பயணங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய சேவையானது நாளை (ஆகஸ்ட் 3 சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என RTA தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், RTA அறிவித்திருந்ததன் படி, துபாய் மெட்ரோ ரெட் லைன், ஜபெல் அலி மெட்ரோ நிலையத்தில் பயணிகள் பரிமாற்றம் செய்வதற்கான அவசியத்தை நீக்க, Y சந்திப்பை (மூன்று திசைகள்) இயக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்டர்பாயிண்டில் இருந்து UAE எக்ஸ்சேஞ்ச் மற்றும் அதற்கு நேர்மாறாக பயணிப்பவர்கள் இனி ஜபெல் அலி இன்டர்சேஞ்ச் நிலையத்தில் இறங்கி ரயில்களை மாற்ற வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது துபாய் மெட்ரோவின் ரெட் லைன் ஆனது, ஒரு முனையில் ரஷிதியாவில் உள்ள சென்டர்பாயிண்ட் மெட்ரோ நிலையத்தையும் Centerpoint Metro Station), மறுமுனையில் எக்ஸ்போ 2020 மெட்ரோ நிலையம் (Expo2020 Metro Station) மற்றும் ஜெபல் அலியில் உள்ள UAE எக்ஸ்சேஞ்ச் நிலையம் (UAE Exchange Metro Station) என இரண்டு இறுதி நிலையங்களையும் கொண்ட துபாயின் மிகவும் நீண்ட மெட்ரோ வழித்தடமாகும்.
தற்போது, இந்த பாதையானது சென்டர்பாயிண்ட் மெட்ரோ நிலையத்திலிருந்து எக்ஸ்போ 2020 மெட்ரோ நிலையத்திற்கு பயணிகளை நேரடியாக அழைத்துச் செல்கிறது. அதுவே, UAE Exchange நிலையத்திற்குச் செல்ல வேண்டிய பயணிகள் ஜெபல் அலி மெட்ரோ நிலையத்தில் (Jebel Ali Metro Station) இறங்கி தங்கள் ரயில்களை மாற்ற வேண்டும்.
அதற்குப் பதிலாக, தற்போது RTA கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தின் மூலம், நீங்கள் ரஷிதியாவின் சென்டர்பாயிண்ட் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டால் ரயில்களை மாற்றும் அவசியமின்றி ஒரே ரயிலில் நேரடியாக எக்ஸ்போ 2020 ஸ்டேஷன் அல்லது UAE எக்ஸ்சேஞ்ச் நிலையத்திற்கு செல்ல முடியும் என்று RTA கூறியுள்ளது. அதாவது, ஜெபல் அலி நிலையத்தில் மெட்ரோ ரயிலின் வழித்தடம் தற்போது மூன்று திசைகளில் (Y ஜங்க்ஷன்) செல்லும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த ஜூன் மாதத்தில், துபாய் நிர்வாகக் குழு அடுத்த சில ஆண்டுகளில் கூடுதல் மெட்ரோ நிலையங்களைச் சேர்ப்பதாக அறிவித்திருக்கின்றது. இதன்படி வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 84 சதுர கிலோமீட்டருக்கு மேல் இயங்கும் 64 நிலையங்களை 140 சதுர கிலோமீட்டருக்கு மேல் 96 நிலையங்களாக உயர்த்துவதை இந்த விரிவாக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது 2040ஆம் ஆண்டுக்குள் 228 சதுர கிலோமீட்டருக்கு மேல் உள்ள 140 நிலையங்களாக அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. துபாய் மெட்ரோவின் விரிவாக்கம், எமிரேட் முழுவதும் பொதுப் போக்குவரத்தின் பங்கை 45 சதவீதமாக அதிகரிப்பது, தனிநபர் கார்பன் வெளியேற்றத்தை 16 டன்னாக குறைப்பது மற்றும் நிலையான போக்குவரத்தின் செயல்திறன் மற்றும் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று RTA தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel