ஐக்கிய அரபு அமீரகமானது வரும் செப்டம்பர் 1, 2024 முதல், ரெசிடென்ஸ் விதியை மீறி அமீரகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி இரண்டு மாத கால அவகாசத்தை அளித்துள்ளது. இதனால் அவர்கள் தங்களுடைய விசா நிலையை சரிசெய்யலாம் அல்லது அபராதம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம்.
அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) நேற்று (வியாழக்கிழமை) இந்த சலுகைக் காலத்தை அறிவித்தது. அதில் விதியை மீறி தங்கியுள்ளவர்கள் பொது மன்னிப்பு காலத்தில் தங்கள் விசா நிலையை முறைப்படுத்தலாம் அல்லது கட்டணம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று ஆணையம் கூறியிருந்தது. இவ்வாறு அபராதம் ஏதும் இல்லாமல் எப்படி நாட்டை விட்டு வெளியேறுவது என்பது குறித்தான தகவல்களை கீழே காணலாம்.
அபராதத்திலிருந்து விலக்கு பெற எப்படி விண்ணப்பிப்பது?
அமீரகத்தின் ரெசிடென்ஸ் சட்டத்தை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் நிதி அபராதத்தில் இருந்து விலக்கு பெற ஒரு கோரிக்கையை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க ஒரு பிரத்யேக சேவை அனுமதிக்கிறது. இதற்காக வழங்கப்பட வேண்டிய ஆவணங்களில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்டின் நகல், விதிமீறல்களுக்கான காரணங்கள் மற்றும் அவற்றை செலுத்த இயலாமை மற்றும் அபராதக் குழுவால் கோரப்பட்ட பிற ஆவணங்கள் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விண்ணப்பிக்க வேண்டிய நபர் அருகிலுள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்திற்கு (Amer) சென்று, தானியங்கு வரிசை டிக்கெட்டைப் பெற வேண்டும். பின் அனைத்து நிபந்தனைகள் மற்றும் ஆவணங்களை பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வாடிக்கையாளர் சேவை ஊழியரிடம் சமர்ப்பித்து சேவை கட்டணம் ஏதேனும் இருந்தால் அதனை செலுத்த வேண்டும் என கூறப்படுகின்றது.
திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30 மணி முதல் இரவு 7 மணி வரை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 12 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் இரவு 7 மணி வரை அல் அவீர் மையத்தில் (General Administration – Al Aweer Centre) இந்த சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமர் மையங்களில், இந்த சேவை அங்கீகரிக்கப்பட்ட வேலை நேரங்களில் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் அதிகாரிகள் தெரியப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel