ஐக்கிய அரபு அமீரகத்தின் 53வது தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் போக்குவரத்து அபராதங்களில் 50 சதவீத தள்ளுபடியை மூன்று எமிரேட்கள் அறிவித்துள்ளன. தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாகன ஓட்டிகளின் சுமையை குறைக்கும் வகையில், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் மற்றும் அஜ்மான் ஆகிய மூன்று எமிரேட்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ராஸ் அல் கைமா காவல்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள X பதிவில், டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை போக்குவரத்து அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் அந்த பதிவில், டிசம்பர் 1 க்கு முன் செய்யப்பட்ட மீறல்களுக்கான அபராதங்களை மட்டுமே இந்த தள்ளுபடி உள்ளடக்கியது என்றும் ராஸ் அல் கைமா காவல்துறை கூறியுள்ளது.
ஆயினும் இந்த தள்ளுபடி கடுமையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு பொருந்தாது என்றும் ராஸ் அல் கைமா காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இதே போன்று மற்றொரு எமிரேட்டான உம் அல் குவைனும் போக்குவரத்து அபராதங்களில் 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும் இது டிசம்பர் 1 முதல் ஜனவரி 5, 2025 வரை அமலில் இருக்கும் எனவும் உம் அல் குவைன் காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், டிசம்பர் 1, 2024 க்கு முன்னர் உம் அல் குவைன் எமிரேட்டில் செய்யப்பட்ட அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கும் இந்த முடிவு பொருந்தும் என்றும், இந்த முன்முயற்சியானது வாகனத் தடைகள் மற்றும் ட்ராஃபிக் பிளாக் பாயின்ட்களை ரத்து செய்வதையும் உள்ளடக்கியது என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடுமையான மீறல்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகாது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்பாக அஜ்மான் எமிரேட்டும் போக்குவரத்து அபாரதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடியை அறிவித்தது. அதன்படி, நவம்பர் 4 முதல் டிசம்பர் 15, 2024 வரையிலான நாட்களில் போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடியை ஏற்கனவே அஜ்மான் காவல்துறை அறிவித்திருந்தது. மேலும் இந்த தள்ளுபடி அக்டோபர் 31 க்கு முன் எமிரேட்டில் செய்யப்பட்ட விதிமீறல்களுக்கான அனைத்து அபராதங்களையும் உள்ளடக்கியதாகும்.
எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் இந்த தள்ளுபடியை பயன்படுத்திக் கொண்டு, தங்களின் போக்குவரத்து அபராதத் தொகையை செலுத்தவும், போக்குவரத்து விதிகளுக்கு இணங்கவும் எமிரேட்களின் காவல்துறை ஆணையங்கள் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel