லுலுவின் மெகா திட்டம்: அடுத்த 5 ஆண்டுகளில் GCC முழுவதும் புதிதாக 100 ஸ்டோர்கள்.. ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு..!!

அமீரகத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் புகழ்பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனமான லுலு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் 100 ஸ்டோர்களை திறக்கவும், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக லுலு குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான யூசுஃப் அலி எம்.ஏ. தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது அவர் பேசுகையில், “GCC மிகவும் வலுவான பொருளாதாரம் கொண்டுள்ளது மற்றும் நாங்கள் வளைகுடா நாடுகள் முழுவதும் இயங்கி வரும் ஒரு Pan-GCC சில்லறை விற்பனையாளர். இங்கு மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதனால் சில்லறை விற்பனை நிலையங்களின் தேவை உள்ளது” என்று கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவிக்கையில் தற்பொழுது 91 கடைகள் லுலு நிறுவனத்தின் அடுத்த கட்ட திட்டத்தில் இருப்பதாகவும், விவாதங்கள் நடந்து கொண்டு இருப்பதால் இந்த எண்ணிக்கை 100ஐ எட்டக்கூடும் என்றும் லுலு ரீடெய்ல் நிறுவனத்தின் CEO சைஃபி ருபாவாலா செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசிய போது, “தற்போது, எங்களிடம் 50,000 பணியாளர்கள் மற்றும் 240 கடைகள் உள்ளன. மேலும் 91 ஸ்டோர்கள் வருவதால், நிச்சயம் வேலை வாய்ப்பு உருவாகும்” என்று கூறியுள்ளார்.
மேலும், வரவிருக்கும் கடைகளின் வெவ்வேறு அளவுகள் காரணமாக புதிதாக பணியமர்த்தப்படவருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், 240 கடைகளை இயக்குவதற்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், கூடுதலாக 100 விற்பனை நிலையங்கள் பிராந்தியம் முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கும் என்று தோராயமாக கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா இந்த இரண்டு நாடுகளிலும் வெளிநாட்டினரின் அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான முக்கிய சந்தைகளாக இந்த இரு நாடுகள் இருக்கும் என்று கடந்த மாதம் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் லுலு ரீடெய்ல் தெரிவித்துள்ளது.
மேலும், ஆட்கள் இல்லாமல் தானியங்கும் கடைகளுக்கான (autonomous stores) சோதனைகளையும் ரீடெய்ல் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தின் முடிவு வெளிவந்தவுடன் தொழில்நுட்பத்தை வெளியிடும் என்று கூறப்படுகிறது. முதலில் இந்த சேவையை சிறிய கடைகளில் அறிமுகப்படுத்த லுலு திட்டமிட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் சிறந்து விளங்கும் இந்த சில்லறை விற்பனை நிறுவனம், அதன் 240 கடைகளில் தினமும் 600,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கையாள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 85 நாடுகளில் இருந்து தயாரிப்புகளை நுகர்வோர்களுக்கு வழங்குகிறது.
இது குறித்து யூசுஃப்பலி பேசுகையில், “லுலு பிராண்டில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாட்டு தலைவர்களின் நம்பிக்கையை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். சர்வதேச மற்றும் பிராந்திய முதலீட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று, எங்களது மொத்த பங்குகளில் 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக IPO-வை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தேவையின் காரணமாக நாங்கள் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் மற்றும் IPO-வில் சேர முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம். எங்கள் IPO தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதிக சந்தா செலுத்தப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார். நிறுவனம் கூறியதன்படி கூடுதல் ஸ்டோர்கள் திறக்கப்பட்டால் வேலை வாய்ப்பை தேடும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel