துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் ஒரு பகுதியான துபாய் ரன் 2024 இன்று (நவம்பர் 24) மிக பிரம்மாண்டமாக நடந்தேறியுள்ளது. இன்று காலை துபாய் ரன் 2024 இல் பங்கேற்பதன் மூலம் அனைத்துத் தரப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சமூக உறுப்பினர்கள் ஷேக் சயீத் சாலையை உலகின் மிகப்பெரிய மற்றும் மிகச் சிறந்த ஓட்டப் பாதையாக மாற்றியுள்ளனர். அதே நேரத்தில் துபாயின் பட்டத்து இளவரசர், துணைப் பிரதமர், ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சர், துபாய் நிர்வாகக் குழுத் தலைவர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான கொண்டாட்டமாக அமைந்தது.
கடந்த வருடம் துபாய் ரன்னில் 2 இலட்சத்து 26,000 பேர் கலந்து கொண்டிருந்த நிலையில் இந்த வருடமும் அந்த எண்ணிக்கையானது அதிகரித்து 2 இலட்சத்து 78,000 ஆக உயர்ந்திருக்கின்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த துபாய் ரன்னில் 5 கிமீ மற்றும் 10 கிமீ என இரு வழிகளில் நடக்கும் ஓட்டப்பந்தயத்திற்காக மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருகே மக்கள் வரிசையில் நின்றனர்.
அதில் மாற்றுத்திறனாளிகள், உடற்பயிற்சி குழுக்கள், சங்கங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்கள், குழத்தைகள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் என எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் இந்த வருடத்திற்கான சிறந்த நினைவுகளை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றுபட்டனர். மேலும் துபாய் ரன் நிகழ்வையொட்டி துபாயில் முக்கிய சாலைகள் இன்று மூடப்படுவதாகவும் மெட்ரோ நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்திருந்தது.
அதுமட்டுமல்லாமல் இந்த துபாய் ரன்னில் கலந்து கொள்ள வேண்டி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துபாய்க்கு அதிகாலையிலேயே மக்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த வருட துபாய் ரன்னின் சிறப்பம்சமாக துபாய் ரன் நடக்கும் இடத்தில் நியான் விளக்குகளுடன் பாராகிளைடர்ஸ் பறந்து சென்றது பங்கேற்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பிரமிக்க வைக்கக்கூடிய நிகழ்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel