ஐக்கிய அரபு அமீரகத்தில் பண்டிகை கால விடுமுறை நாட்கள் தொடங்குவதால் குடியிருப்பாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு பயணிக்க திட்டமிடுகின்றனர். இதுபோன்ற பண்டிகைக் கால சீசனில், கடைசி நிமிடத்தில் திட்டமிடுபவர்கள் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும் என்றும், சேருமிடம், தங்குமிடம், விமானங்கள், ஹோட்டல்கள் மற்றும் விசா கிடைக்கும் தன்மை போன்ற காரணங்களால் விலைகள் பெரும்பாலும் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் பயண முகவர்கள் கூறியுள்ளனர்.
அவர்களின் கூற்றுப்படி, அமீரகத்தில் குளிர்கால மாதங்கள் தொடங்குவதால், குறிப்பாக டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து ஜனவரி தொடக்கம் வரை, பள்ளிகள் மூடப்படுவதால், பல குடியிருப்பாளர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதால் விமான டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, விமானக் கட்டணங்கள், ஹோட்டல் கட்டணங்கள் விடுமுறை நெருங்கும் சமயத்தில் கணிசமாக அதிகரிக்கும். மேலும், சேருமிடம் மற்றும் நேரக் கட்டுப்பாடுகளைப் பொறுத்து, முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்களை விட கடைசி நேரப் பயணிகள் சராசரியாக 15 முதல் 20 சதவீதம் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கலாம் என்பதையும் பயண முகவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் ஆர்மீனியா போன்ற நெறிப்படுத்தப்பட்ட விசா கொண்ட நாடுகளுக்கும் அமீரகக் குடியிருப்பாளர்கள் ஈர்க்கப்படுவதாகவும். இந்த இடங்கள் அண்டை நாடுகளான கத்தார், ஓமன் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுடன் சேர்ந்து, குறுகிய பயணங்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளதாகவும் பயண ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
கப்பல் பயணத்தில் ஆர்வம் காட்டும் பயணிகள்
ஒரு பக்கம் விமான டிக்கெட் விலை உயரும் நிலையில், மற்றொரு பக்கம் பயணிகளுக்கு கப்பல்கள் பிரபலமான தேர்வாகி வருவதாகக் கூறப்படுகிறது. நாட்டில் வெப்பநிலை குளிர்ச்சியடையத் தொடங்குவதால் பெரும்பாலான அமீரகக் குடியிருப்பாளர்கள் கடல் பயணங்கள் அல்லது கப்பல் பயணங்களில் ஆர்வம் காட்டுவதாக பயண ஆபரேட்டர்கள் தெரிவிக்கின்றனர்.
அமீரகத்தில் Resort World Cruises எனும் கப்பல் பயண சேவை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, குடியிருப்பாளர்கள் மத்தியில் வலுவான தேவையை கண்டுள்ளதாக அதன் ஆப்பரேட்டர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் Costa மற்றும் MSC போன்ற க்ரூஸ் லைன்கள் தங்கள் பெரிய கப்பல்களால் பயணிகளை ஈர்ப்பதாகவும் பயண நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வளைகுடா பயணங்களுக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக அபுதாபியிலிருந்து கத்தாருக்கு கப்பல் பயளுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்பெல்லாம், மூன்று பேர் தங்கும் அறைக்கு, 3,000 திர்ஹம்கள் செலவாகும் என்றும், ஆனால் இப்போது அதிக தேவையின் காரணமாக விலை உயர்வை கண்டுள்ளதாகவும் பயண முகவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வளைகுடா கப்பல் பயணத்தை பொருத்தவரையில் பயணிகளுக்கு கத்தார் விசா மட்டுமே தேவை, அதை வருகையின் போது 150-200 திர்ஹம் கட்டணத்தில் பெறலாம். மேலும் சில க்ரூஸ் பேக்கேஜ்களில் விசா செலவும் ஈடுசெய்யப்படுகின்றன. இதனால் கப்பல் பயணங்கள் பயணிகளுக்கு இன்னும் கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது. மேலும் துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை இந்த பயணங்களுக்கான பிரபலமான புறப்பாடு மையங்களாகத் தொடர்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel