விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளின் விரிவாக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் உட்பட உலகளவில் விமானிகளுக்கான தேவை தொடரந்து அதிகரித்து வருவதாக கடந்த செவ்வாய்க்கிழமை, எமிரேட்ஸ் விமானப் பயிற்சி அகாடமியில் நடைபெற்ற ஐந்தாவது பட்டமளிப்பு விழாவின் போது உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் & குரூப்பின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி ஷேக் அகமது பின் சையத் அல் மக்தூம், EFTAயின் பிரிவு துணைத் தலைவர் கேப்டன் அப்துல்லா அல் ஹம்மாதி, எமிரேட்ஸ் துணைத் தலைவர் & தலைமை செயல்பாட்டு அதிகாரி அடெல் அல் ரெதா, பிரெசிடென்ட் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் டிம் கிளார்க் மற்றும் எமிரேட்ஸின் துணைத் தலைவர் அட்னான் காசிம் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எமிரேட்ஸ் விமானப் பயிற்சி அகாடமியின் (EFTA) பிரிவு துணைத் தலைவர் கேப்டன் அப்துல்லா அல் ஹம்மாதி செய்தி ஊடகங்களிடம் பேசிய போது, உலகளவில் விமானிகளுக்கான தேவை உயர்ந்து கொண்டே இருக்கும், அபரிமிதமாக அதிகரித்து வரும் பயணத்திற்கான தேவை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் சுற்றுச்சூழலின் விரிவாக்கம் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நேரத்தில் விமானிகள் தங்கள் கரியரின் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகளை அணுகலாம் என்றும், மாணவர்களுக்கும், பட்டப்படிப்பு முடித்து விட்டு வெளியேறுபவர்களுக்கும் விமானியாக மாறுவது ஒரு சிறந்த கரியர் தேர்வு என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
அமீரகத்தை பொறுத்தவரை துபாயின் முதன்மை கேரியரான எமிரேட்ஸ், தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகளுக்கு கவர்ச்சிகரமான ஊதிய தொகுப்பை வழங்குகிறது. முதல் அதிகாரியின் சம்பளம் தங்குமிடம், வருடாந்தர விடுப்பு மற்றும் பிற சலுகைகளுடன் சேர்த்து ஒரு மாதத்திற்கு 26,000 திர்ஹம்ஸ் முதல் 34,000 திர்ஹம்ஸ் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேனேஜ்மன்ட் கன்சல்ட்டிங் நிறுவனமான ஆலிவர் வைமனின் கூற்றுப்படி, 2032ஆம் ஆண்டிற்குள் உலகளவில் சுமார் 80,000 விமானிகள் பற்றாக்குறை இருக்கும் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா மிகப்பெரிய பற்றாக்குறையைக் காண உள்ளதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் விமானப் பயணத் தேவையில் கூர்மையான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel