ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களை பணியமர்த்துவது மற்றும் அவர்களுக்கான விசாக்களை செயலாக்குவது உள்ளிட்ட நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகமான MoHRE அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அமீரகத்தில் இப்போது வீட்டுப் பணியாளர்களுக்கான அனைத்து விசா சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே அணுக முடியும் என்று MoHRE அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
விசா நடைமுறைகளை எளிதாக்க அமீரக அரசு மேற்கொண்டு வரும் பல புதுப்பிப்புகளின் ஒரு பகுதியாக இந்த புதிய நடைமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இனி நாட்டில் வீட்டுப் பணியாளர்களுக்கான விசாவை செயலாக்குதல், புதுப்பித்தல் மற்றும் ரத்து செய்தல் போன்ற அனைத்து நடைமுறைகளையும் ‘துபாய் நவ் (Dubai Now)’ ஸ்மார்ட் ஆப் மூலம் அணுக முடியும்.
இந்த முயற்சியானது விசா செயல்முறையை எளிதாக்குவதையும், அத்தகைய பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நேரத்தை கணிசமாகக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த தளம் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) மற்றும் துபாயில் உள்ள வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) இணைந்து கொண்டுவரப்பட்ட ஒரு திட்டமாகும்.
இந்த புதிய திட்னத்தின் கீழ் ‘வீட்டுப் பணியாளர் பேக்கேஜ்’ மூலம், பரிவர்த்தனைகளில் ஈடுபடும் சேவை சேனல்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டதுடன், இதற்கான செயல்முறையை முடிக்க தேவையான படிகள் 12ல் இருந்து நான்காகக் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேசமயம், சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய தேவைகள் எட்டிலிருந்து இரண்டாகவும், விண்ணப்ப செயலாக்க நேரம் 30லிருந்து ஐந்து நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தேவையான ஆவணங்களின் எண்ணிக்கையும் 10ல் இருந்து நான்காக குறைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒரு பரிவர்த்தனைக்கு 400 திர்ஹம்கள் வரை பணம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவை எவ்வாறு செயல்படுகிறது
வீட்டுப் பணியாளரின் குடியிருப்பு விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான படிகள்:
- அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின் படி, “துபாய் நவ்” பயன்பாட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த விசா சேவைகளை எளிதாக அணுகலாம்.
- ஒரு ஒருங்கிணைந்த சேவை பேக்கேஜ் படிவத்தை நிரப்ப வேண்டும், அதில் வீட்டுப் பணியாளரின் விவரங்களை உள்ளிட்டு, அடையாள மற்றும் பாஸ்போர்ட் தகவலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- வேலை ஒப்பந்தம் பயன்பாட்டிற்குள் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளது.
- வீட்டுப் பணியாளர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதன் பிறகு முடிவுகள் செயலி மூலம் அனுப்பப்படும்.
- பணியாளரின் அடையாள அட்டை மற்றும் குடியிருப்பு அனுமதிகள் பின்னர் வழங்கப்படும்.
இந்த வீட்டுப் பணியாளர் தொகுப்பின் வெளியீடு Mohre’s Work Bundle திட்டத்தின் மூன்றாம் கட்டமாகும், இது அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் ஒன்றிணைப்பதன் மூலம் குடியிருப்பு விசாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அனுமதிகளுக்கான செயல்முறைகளை எளிதாக்குகிறது.
முதல் கட்டம் மார்ச் மாதம் துபாயில் வெளியிடப்பட்டது, பின்னர் அது ஏழு எமிரேட்களிலும் செயல்படுத்தப்பட்டது. அதேபோன்று MoHRE கொண்டுவந்த இரண்டாம் கட்டம் நாட்டில் உள்ள சுமார் 600,000 நிறுவனங்களையும் 7 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களையும் உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel