உலகளவில் உள்ள தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் மில்லியனர்கள் போன்றோருக்கு கவர்சிகரமான நகரமாக விளங்கும் துபாயில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ரியல் எஸ்டேட் துறையில் குடியிருப்புகளுக்கான தேவையும் நாளுக்கு நாள் வலுவடைந்தது வருகிறது.
இவ்வாறு உலகெங்கிலும் இருந்து வரும் புதிய குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் ஏற்பட்டுள்ள அதிக தேவையின் காரணமாக, அடுத்த ஆண்டான 2025ல் துபாய் எமிரேட்டில் குடியிருப்பு இடங்களின் வாடகைகள் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று ரியல் எஸ்டேட் துறை வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உயர்நிலைப் பகுதிகளில் வாடகை அதிகளவில் உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், துபாயின் மத்திய பகுதிகளில் அதிக வாடகை இருப்பதால், அதிக குடியிருப்பாளர்கள் எமிரேட்டின் புறநகரில் உள்ள இடங்களுக்கு இடம்பெயர்வார்கள் எனவும், இதன் விளைவாக அந்த பகுதிகளும் கணிசமான வாடகை அதிகரிப்பைக் காணும் என்றும் ரியல் எஸ்டேட் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய ஆண்டுகளில், துபாய் சொத்து வாடகைகள் விலை உயர்வைச் சந்தித்து வருகிறது, இதற்குப் பின்னால் அதிகரித்து வரும் மக்கள்தொகை முக்கிய காரணியாகவும் உள்ளது. துபாய் புள்ளியியல் மையத்தின்படி, கடந்த ஆண்டின் இறுதியில் 3.654 மில்லியனாக இருந்த எமிரேட்டின் மக்கள்தொகை டிசம்பர் 10 அன்று 3.814 மில்லியனை எட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
ஆகவே, புதிய குடியிருப்பாளர்களின் வருகையே, வாடகை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் கூட, துபாயில் ஒரு பென்ட்ஹவுஸ் 4.4 மில்லியன் திர்ஹம்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது, அதே சமயம் அக்டோபரில் ஒரு வில்லா ஆண்டுக்கு 15.5 மில்லியன் திர்ஹம்களுக்கு குத்தகைக்கும் விடப்பட்டது.
வரும் ஆண்டுகளில் புதிய குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
தொழில் வல்லுநர்கள், அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் வேலைவைப்புகளைத் தேடும் மக்களின் வருகையானது 2025 இல் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், வரும் ஆண்டில் எமிரேட்டில் வாடகைகள் மேலும் அதிகரிக்கும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2022 மற்றும் 2023 இன் அதிகபட்சத்தை விட மெதுவான வேகத்தில் இருந்தாலும், 2024 ஆம் ஆண்டில் பெரும்பாலான பகுதிகளில் வாடகைச் சந்தை சராசரியாக 15-20 சதவிகிதம் அதிகரித்தாகக் குறிப்பிடும் ரியல் எஸ்டேட் அதிகாரிகள், 2025 ஆம் ஆண்டில் நகரம் முழுவதும் வாடகைகள் 5-10 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
2025ல் துபாயின் இந்த பகுதிகளில் பெரும்பாலும் வாடகை உயரும்
அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் போன்ற பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களால் பயனடையும் ‘துபாய் சவுத்’ போன்ற வளர்ந்து வரும் மையங்களில், ஜுமைரா தீவுகள் மற்றும் அல் பராரி போன்ற சொகுசுப் பகுதிகள் குறிப்பிடத்தக்க வாடகை உயர்வைக் காணக்கூடும் என்று ரியல் எஸ்டேட் நிறுவன அதிகாரிகள் யூகித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் நிபுணர்களின் கூற்றுப்படி, ஜுமேரா பீச் ரெசிடென்ஸ் (JBR), டவுன் ஸ்கொயர் மற்றும் துபாய் புரொடக்ஷன் சிட்டி போன்ற நிறுவப்பட்ட சுற்றுப்புறங்கள் நிலையான வளர்ச்சியை அனுபவிக்கக்கூடும். குறிப்பாக, துபாய் மெரினா, பாம் ஜுமேரா, டவுன்டவுன் துபாய் மற்றும் ஜுமைரா பே தீவு போன்ற இடங்கள் தொடர்ந்து அதிக தேவையை அனுபவிக்கும் என்று கூறுகிறார்கள்.
இதற்கிடையில், ஜுமைரா வில்லேஜ் சர்க்கிள் (JVC) மற்றும் அல் ஃபுர்ஜான் போன்ற மலிவு விலையில் உள்ள பகுதிகளில் குறைந்தபட்ச வாடகை 2-5 சதவீதம் வரை அதிகரிக்கலாம். அதேசமயம், துபாய் சவுத் மற்றும் இன்டர்நேஷனல் சிட்டி போன்ற வெளியிலுள்ள இடங்கள் போட்டி விலை நிர்ணயம் மற்றும் அதிகரித்து வரும் குடியிருப்பு கட்டிடங்கள் காரணமாக மிகவும் நிலையான வாடகை உயர்வை அனுபவிக்கலாம்.
இவற்றுக்கு மத்தியில், அல் குஸ், ஜெபல் அலி வில்லேஜ், அல் பர்ஷா சவுத், அல் வர்கா மற்றும் இன்டர்நேஷனல் சிட்டி ஆகிய பகுதிகளில் 2025 இல் குறைந்த வாடகை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளை, துபாயின் புறநகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel