ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஆண்டின் கடைசி நீண்ட விடுமுறை நாட்களான அமீரக தேசிய தின விடுமுறைகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அடுத்து வரவிருக்கும் புதிய ஆண்டான 2025ஆம் ஆண்டில் குடியிருப்பாளர்கள் அனுபவிக்கவுள்ள பொது விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
புத்தாண்டு விடுமுறை – ஜனவரி 1, 2025
2025ஆம் ஆண்டின் முதல் விடுமுறை நாளான புத்தாண்டு விடுமுறை ஜனவரி 1ம் தேதி புதன்கிழமை வரவுள்ளது. இதனால், புத்தாண்டின் தொடக்கத்தில் வார நாட்களின் நடுப்பகுதியில் ஒரு இனிமையான பொது விடுமுறையை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம்.
ஈத் அல் பித்ர் 2025
அமீரக அரசால் வெளியிடப்பட்டுள்ள பொது விடுமுறை நாட்கள் தொடர்பான அறிவிப்பின்படி, பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, அரபு மாதமான ஷவ்வால் 1 முதல் ஷவ்வால் 3 வரை, பிறை பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டு மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
ரமலான் 30 நாட்களுக்கு இருந்தால், 30 வது நாள் ஈத் அல் பித்ர் விடுமுறையுடன் அதிகாரப்பூர்வ விடுமுறையாக இருக்கும். இது தொடர்புடைய ஆங்கில மாதத்திற்கான அதிகாரப்பூர்வ நாட்கள் பிறை பார்ப்பதன் அடிப்படையில் பின்னர் உறுதிப்படுத்தப்படும்.
எவ்வாறாயினும் ஈத் அல் ஃபித்ர் பண்டிகை நாளானது மாரச் 30, ஞாயிறுக்கிழமை அல்லது மார்ச் 31, திங்கள்கிழமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு திங்கள்கிழமையாக இருந்தால் மார்ச் 29, சனிக்கிழமை முதல் ஏப்ரல் 2, புதன்கிழமை வரை என ஐந்து நாட்கள் மிக நீண்ட தொடர் விடுமுறை அளிக்கப்படும். மேலும் இதுவே 2025ம் ஆண்டின் நீண்ட விடுமுறையாகவும் அமையும்.
அரபா தினம் – ஒரு நாள் விடுமுறை
அரபா தினத்திற்காக அரபு மாதம் துல் ஹஜ் ஒன்பதாம் தேதி அமீரகத்தில் குடியிருப்பாளர்களுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். எனினும் பிறை பார்த்த பிறகு விடுமுறைக்கான சரியான தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆயினும், இந்த தேதியானது ஜூன் 5, வியாழன் அல்லது 6ம் தேதி வெள்ளிக்கிழமையாக இருக்க வாய்ப்புள்ளது.
ஈத் அல் அதா 2025 – மூன்று நாள் விடுமுறை
அராஃபத் தினத்திற்கு அடுத்த மூன்று நாட்களான துல் ஹஜ் 10, 11 மற்றும் 12, ஈத் அல் அதா பண்டிகையை குறிக்கும் நாட்களாகும். எனவே இந்த மூன்று நாட்களும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறையானது ஜூன் 6 முதல் 9 வரையிலான நாட்களில் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையும் அமீரகத்தின் மிகவும் நீண்ட மற்றுமொரு தொடர் விடுமுறை நாட்களாக அமையும்.
இஸ்லாமிய புத்தாண்டு – ஒரு நாள் விடுமுறை
இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு அரபு மாதமான முஹர்ரம் மாதத்தின் முதல் நாளில் அமீரக குடியிருப்பாளர்களுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும். இந்த தேதியானது ஜூன் 27ம் தேதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அமைந்தால் வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். எனினும் பிறை பார்ப்பதை பொருத்து இந்த தேதியானது மாறுபடும்.
முஹம்மது நபி [ஸல்] அவர்களின் பிறந்த நாள் – ஒரு நாள் விடுமுறை
நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் பிறந்த நாள் அரபு மாதமான ரபி அல் அவ்வல் மாதத்தின் 12 வது நாளில் வருகிறது, அதில் குடியிருப்பாளர்கள் ஒரு நாள் விடுமுறையை எதிர்பார்க்கலாம். பிறையை பார்க்கும் குழுவின் அறிவிப்புக்கு பிறகே சரியான விடுமுறை தேதி உறுதிப்படுத்தப்படும். எனினும் இந்த விடுமுறை செப்டம்பர் 4 அல்லது 5ம் தேதியாக இருக்கலாம். அவ்வாறு 5ம் தேதியாக இருந்தால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
ஈத் அல் எதிஹாத் – டிசம்பர் 2-3, 2025
ஈத் அல் எதிஹாத் எனப் பெயரிடப்பட்டுள்ள அமீரக தேசிய தின விடுமுறையானது வார நடுப்பகுதியில் குடியருப்பாளர்களுக்கு கிடைக்கும் மற்றொரு பொது விடுமுறையாகும். இது 2025 ஆம் ஆண்டின் கடைசி விடுமுறையாகும். எனவே குடியிருப்பாளர்களுக்கு டிசம்பர் 2, செவ்வாய்கிழமை மற்றும் டிசம்பர் 3, புதன்கிழமைகளில் பொது விடுமுறை கிடைக்கும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel