அமீரக செய்திகள்

துபாய் 24H ரேஸ் 2025: இந்தியக் கொடியை அசைத்து வெற்றியைக் கொண்டாடிய நடிகர் அஜித் குமார்!!

துபாயில் இன்று ஜனவரி 12, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 24H பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணி 3வது இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சி அமர்வின் போது ஒரு கார் விபத்தை சந்தித்த போதிலும், அவரும் அவரது அணியின் சக வீரர்களும் கார் பத்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அவர் ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமாவுக்கு இணையாக கார் பந்தயங்கள் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால், சமீபத்தில் ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற அணியைத் தொடங்கினார்.

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற துபாய் 24H தொடரில் தனது அணியுடன் நடிகர் அஜித் பங்கேற்றார் . இந்த பந்தயத்திற்கு முன் நடைபெற்ற பயிற்சி அமர்வின் போது பிரேக் செயலிழப்பு காரணமாக விபத்தை எதிர்கொண்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பித்ததால், விபத்துக்குப் பிறகும் பந்தயத்தில் உற்சாகமாக பங்கேற்றார்.

தற்பொழுது, நடிகர் அஜித் 991 பிரிவில் 3 வது இடத்தையும், GT 4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸையும் பிடித்ததாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், நடிகர் அஜித்குமார் ரேசிங் அணி சில வெற்றிகளைப் பெற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், நடிகர் அஜித் தனது வெற்றி தருணத்தை தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கொண்டாடிய காட்சிகளை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதேசமயம் பந்தயத்திற்குப் பிறகு, அவர் இந்தியக் கொடியை அசைத்து வெற்றியைக் கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துபாய் 24H பந்தயம் என்பது துபாய் ஆட்டோட்ரோமில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் டூரிங் கார் ஆட்டோமொபைல் என்டூரன்ஸ் பந்தயமாகும். இது 2006 முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பந்தயத்தில் அஜித்குமாரும் புதிதாக உருவாக்கப்பட்ட தனது ரேசிங் அணியுடன் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!