துபாயில் பல தசாப்தங்களாக கராமாவில் வசிக்கும் இந்தியர்கள்.. அங்கேயே வசிப்பதற்கு காரணம் என்ன..??

துபாயில் ஒவ்வொரு முறை குடியிருப்புகளின் வாடகை கிடுகிடுவென உயரும் போதும், மக்கள் அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற பகுதியில் குடியேறுவார்கள். ஆனால், துபாய் க்ரீக்கின் மேற்குக் கரையில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியான கராமாவில் வசிக்கும் மக்கள் இன்றுவரை வெளியேறாமல் பல தசாப்தங்களாக தொடர்ந்து வசித்து வருகின்றனர். கராமாவில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுக்க எவ்வளவு செலவாகும்? கராமா குறித்து அங்கு வசிப்பவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
கராமா துபாயில் உள்ள பழமையான சமூகங்களில் ஒன்றாகும். இங்கு 50 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் முதல் புத்தம் புதிய வசதிகள் கொண்ட குடியிருப்புகள் வரை இருக்கின்றன. இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே உள்ள இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அதிலும் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய துபாயின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக கராமா இருக்கின்றது. மேலும் அதிகளவு தமிழ் உணவகங்கள் கராமா பகுதியிலேயே இருக்கின்றன.
கராமா துபாயில் அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புப் பகுதியாகவும், துபாயின் மிகவும் மையப் பகுதியாகவும் உள்ளது. மேலும், நகரத்தில் பரந்த அளவிலான போக்குவரத்து வசதிகள் இருப்பதால், கராமாவிலிருந்து நகரத்தின் வேறு எந்தப் பகுதிகளுக்கும் குடியிருப்பாளர்கள் எளிதாகப் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியிருப்பாளர்களின் கருத்து
கராமாவின் நீண்ட வரலாற்றின் காரணமாக, ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுப்பவர்களுக்கு பல தேர்வுகளை இப்பகுதி வழங்குகிறது. கராமாவில் 50 ஆண்டுகள் பழமையான 3BHK அபார்ட்மெண்டிற்கு 72,000 திர்ஹம்ஸ் வாடகை செலுத்துவதாகவும், குறைவான வாடகையைக் கருத்தில்கொண்டு அதிகளவிலான மக்கள் குடியேறுவதாகவும் பல ஆண்டுகளாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் துபாய் நிலத் துறையால் (DLD) அறிமுகம் செய்யப்பட்ட துபாய் ரெண்டல் இன்டெக்ஸ் (DRI) அப்பகுதியில் உள்ள 3BHK அப்பார்ட்மெண்டின் வாடகை வரம்பை 90,000 திர்ஹம்ஸ் முதல் 110,000 திர்ஹம்ஸ் வரை நிர்ணயிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாக்கப்படும் பாரம்பரியம்
கராமாவில் பல ஆண்டுகளாக, பழைய கட்டிடங்கள் பல புதுப்பிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் வளர்ந்தாலும், சுற்றுப்புறத்தின் பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, கராமாவில் பழைய மற்றும் புதிய குடியிருப்பு கட்டிடங்களின் கலவையைக் காணலாம். இது அப்பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த பலனாக மாறுகிறது.
அதாவது பட்ஜெட்டில் வாடகைக்கு குடியிருப்புக் கட்டிடத்தை தேடுபவர்களில் இருந்து கலைப்படைப்பு நிறைந்த அமினிட்டிஸ் (amenities) உடன் கூடிய வசதியான புதிய கட்டிடங்களைத் தேடுபவர்கள் வரை அனைவருக்கும் கராமாவில் அதற்கேற்றவாறு கட்டிடங்கள் இருக்கின்றன என்று குடியிருப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இவை தவிர, மக்களின் போக்குவரத்துக்கு ஏதுவாக பின்வரும் பொது வசதிகளும் கராமாவில் உள்ளன:
கராமாவில் பொது வசதிகள்
- ADCB மெட்ரோ நிலையம்
- கராமா பஸ் நிலையம்
- கராமா சமூகப் பூங்கா, அருகில் ஜபீல் பூங்கா உள்ளது
- பல ஹைப்பர் மார்க்கெட்கள், வணிக வளாகங்கள்
- கராமா மீன் சந்தை
- பிரத்யேக இ-ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் பாதைகள்
மைய இடம்
கராமா குடியிருப்பாளர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு மற்றொரு காரணம் அதன் மைய இடம். ஆம், இது துபாயின் மிகவும் மையப் பகுதியாக உள்ளது. அருகில் ஒரு மெட்ரோ நிலையம் (ADCB மெட்ரோ நிலையம்), ஒரு பெரிய பேருந்து நிலையம் மற்றும் ஷேக் சையத் சாலை (E11) உடன் நேரடியாக இணைக்கும் சாலைகள் உள்ளன. சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) கட்டப்பட்ட பல சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர் பாதைகள் மூலம், இப்பகுதிக்குள், எளிதாகச் செல்வது எளிது.
பரபரப்பான சமூகம்
ஆயிரக்கணக்கான வசிக்கும் சுற்றுப்புறம் என்பதால் கராமா எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அருகாமையில் உள்ள பல உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் இரவின் பிற்பகுதி வரை திறக்கப்படுவதாகவும், ஒரு சில சேவை 24×7 கிடைக்கும் என்றும் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். மேற்கூறப்பட்ட பல்வேறு காரணங்கள் மக்களை கராமாவை நோக்கி ஈர்ப்பதாகக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel