அமீரக செய்திகள்

துபாய் சாலையில் ஸ்டண்ட் செய்த கார்.. 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்த போலீஸ்!!

துபாயில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கவும் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சில பொறுப்பற்ற ஓட்டுநர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய மீறல்களில் ஈடுபட்டு காவல்துறையிடம் பிடிபடுகிறார்கள். அவ்வாறு சமீபத்தில் துபாயில் மழையின் போது ஆபத்தான ஸ்டண்ட் செய்த ஓட்டுநரை துபாய் காவல்துறையின் ரோந்து குழுவினர் கைது செய்து, அவரது வாகனத்தை பறிமுதல் செய்துள்ளது.

காவல்துறை சீரற்ற வானிலையின் போது, எச்சரிக்கையாக இருக்கவும், போக்குவரத்துச் சட்டங்களைப் பின்பற்றவும் பொதுமக்களை வலியுறுத்திய போதிலும் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்த துபாய் காவல்துறை அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு கருப்பு நிற பிக்கப் டிரக் அல் மர்மூம் பாலைவனத்தைச் சுற்றிச் செல்லும் போது, சாலையில் தூசியைக் கிளப்பிக்கொண்டு வேகமாகச் செல்வதைக் காணமுடிகிறது.

இதைக் கண்காணித்த துபாய் காவல்துறையின் ரோந்துக் குழு உடனடியாக வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று ஓட்டுநருக்கு அபராதம் விதித்ததுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டின் ஆணை எண். 30 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில், மீறுபவர் அதைத் திரும்பப் பெற 50,000 திர்ஹம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இதுபோல, ஸ்டண்ட் செய்தல் மற்றும் டிரிஃப்டிங் (drifitng) செய்தல் உள்ளிட்ட இந்த பொறுப்பற்ற செயல்கள், பொது பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துவதுடன் அப்பகுதிக்கு இடையூறு விளைவிக்கும் என்று துபாய் காவல்துறையின் செயல்பாட்டு விவகாரங்களுக்கான உதவித் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறியுள்ளார்.

மேலும், துபாய் காவல்துறை கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதை, குறிப்பாக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் சாலைப் பாதுகாப்பை சமரசம் செய்யும் நடத்தைகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை எடுக்கிறது என்று கூறிய மேஜர் ஜெனரல் அல் மஸ்ரூயி, போக்குவரத்து சட்டத்தை மீறுபவர்கள் வாகன பறிமுதல், சட்ட சம்மன்கள் மற்றும் சாத்தியமான வழக்குகள் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும் கடுமையான குற்றமாகும் என்று வலியுறுத்தினார், ஆகவே, அனைத்து ஓட்டுநர்களும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும், வேக வரம்புகளை கடைபிடிக்குமாறும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!