அமீரக செய்திகள்

உலகளவில் பாஸ்போர்ட் தரவரிசையில் வலுவான இடத்தை பிடித்த அமீரக பாஸ்போர்ட்..

2025 ஆம் ஆண்டில் உலகின் 10 வலிமையான நாடுகளின் பாஸ்போர்ட்களின் தரவரிசைப்பட்டியலில் ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட் இடம்பிடித்துள்ளது. குறிப்பாக, விசா இல்லாத அணுகல் மற்றும் 185 நாடுகளுக்கு விசா-ஆன்-அரைவலுடன் கடந்த ஆண்டை விட ஒரு இடம் முன்னேறி பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 15வது இடத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 11வது இடத்திற்கும் 2025 ஆம் ஆண்டில் 10வது இடத்திற்கும் ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முன்னேறி வருகிறது. அதே போல் 2017 ஆம் ஆண்டில் 38 வது இடத்தில் இருந்த அமீரகம், 2018 ஆம் ஆண்டில் 21 வது இடத்திற்கு உயர்ந்தபோது, ​​மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற வளைகுடா நாடுகளில், கத்தார் 47வது இடத்திலும், குவைத் 50வது இடத்திலும், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா 58வது இடத்திலும், ஓமான் 59வது இடத்திலும் உள்ளன. மேலும், இந்தியாவின் தரவரிசை 2024 இல் 80 வது இடத்திலிருந்து இந்தாண்டு 85 வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த ஆண்டு, லாட்வியா, லிதுவேனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகியவையும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் 10 வது இடத்தில் உள்ளன.

UAE பாஸ்போர்ட் வைத்திருப்பவர் விசா இல்லாமல் செல்லக்கூடிய சில பிரபலமான நாடுகள்:

  • கனடா
  • சீனா
  • டென்மார்க்
  • பின்லாந்து
  • ஜெர்மனி
  • கிரீஸ்
  • ஜப்பான்
  • மாலத்தீவுகள்
  • மொரிஷியஸ்
  • மொராக்கோ
  • நியூசிலாந்து
  • நார்வே
  • சிங்கப்பூர்
  • ஸ்பெயின்
  • சுவிட்சர்லாந்து
  • தாய்லாந்து
  • துருக்கி
  • இங்கிலாந்து

சிங்கப்பூரின் பாஸ்போர்ட் 195 விசா இல்லாத இடங்களுடன் உலகளவில் வலுவானதாக முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் 2018-2023 வரை முன்பு முதலிடத்தில் இருந்த ஜப்பான் இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.

2024 ஆம் ஆண்டில், வலுவான தரவரிசையில் இருந்த பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளும் இந்த ஆண்டு முதலிடத்திலிருந்து சரிந்தன. அதைத் தொடர்ந்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா மற்றும் ஸ்பெயின் ஆகியவை 192 விசா இல்லாத இடங்களுடன் 3வது இடத்தைப் பிடித்தன.

ஹென்லி & பார்ட்னர்ஸ் குறியீடு மற்றும் அதன் உள்ளடக்கங்கள் சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையம் (IATA) வழங்கிய தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறியீட்டில் 199 வெவ்வேறு பாஸ்போர்ட்கள் மற்றும் 227 வெவ்வேறு பயண இடங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!