அமீரக செய்திகள்

அமீரகம் முழுவதும் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து மாட்டிறைச்சியை அகற்ற உத்தரவு!! என்ன காரணம்.??

ஐக்கிய அரபு அமீரகத்தில் மிளகு மற்றும் மிளகாய்த்தூள் கொண்டு பதப்படுத்தப்படும் ‘pepperoni beef’ என்ற உணவில் லிஸ்டீரியா மோனோசைட்டோஜெனஸ் என்ற தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா பரவும் வாய்ப்பிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து பெப்பரோனி மாட்டிறைச்சியை திரும்பப் பெற அமீரக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி, நாட்டில் உள்ள அனைத்து சந்தைகளிலிருந்தும் இந்த தயாரிப்பு அகற்றப்படுவதோடு, சிறப்பு ஆய்வகங்களில் சோதனை செய்வதற்காக ஆய்வக மற்றும் களக் குழுக்கள் தற்போது கூடுதல் மாதிரிகளை சேகரித்து வருவதாக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MoCCE) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MoCCE உள்ளூர் ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையத்துடன் (Saudi Food and Drug Authority) இணைந்து செயல்படுவதாகவும், இது தயாரிக்கும் நிறுவனத்தை அடையாளம் காணவில்லை, ஆனால் “ஆய்வக சோதனைகள் முடிந்து சம்பவத்தின் விவரங்கள் சரிபார்க்கப்படும் வரை அமீரக சந்தைகளில் இருந்து பாதிக்கப்பட்ட தயாரிப்பை முன்னெச்சரிக்கையாக அகற்றுவதற்கான ஒருங்கிணைப்பு நடந்து வருகிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்தப்படும்போது, தயாரிக்கப்படும்போது அல்லது பேக் செய்யப்படும்போது பரவும் பாக்டீரியா லிஸ்டீரியா தொற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், இது கர்ப்பிணிப் பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு உணவு மூலம் எளிதில் பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரநிலைகள்

இதுபோல மனித உடலின் ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் உணவுப் பொருட்கள் குறித்த தகவல்களை GCC நாடுகள் முழுவதும் உடனடியாக பரிமாறிக்கொள்வதற்கு வசதியாக ‘Gulf Rapid Alert System for Food (GRASF)’ நடைமுறையில் உள்ளது என்று MoCCAE உறுதியளித்தது.

இந்த அமைப்பு உணவு அபாய எச்சரிக்கைகளை நிர்வகிக்க உதவுவதுடன் அசுத்தமான மற்றும் தவறாக பெயரிடப்பட்ட உணவுக்கான தடை மற்றும் அவற்றை நீக்கவும் பயன்படும் என்று கூறப்படுகிறது. தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், நுகர்வோர் ஆரோக்கியத்தை திறம்பட பாதுகாக்கவும் GCC நாடுகளுடன் தொடர்பு கொள்ளவும் இது பயன்படுகிறது.

இது குறித்து MoCCAE உணவு பன்முகத்தன்மைக்கான உதவி துணை செயலாளர் டாக்டர் முகமது சல்மான் அல் ஹமாதி அவர்கள் பேசுகையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அல்லது இறக்குமதி செய்யப்பட்டாலும், நாட்டின் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் மிக உயர்ந்த உணவுப் பாதுகாப்பு தரங்களைப் பயன்படுத்த அமைச்சகம் பல்வேறு தொடர்புடைய அதிகாரிகளுடன் பணியாற்றி வருவதாகவும், மக்கள் வாங்குவதற்கு உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குறிப்பிடப்பட்ட தயாரிப்பு தொடர்பான விசாரணைகளை அமைச்சகம் தீவிரப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!