ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் அனைவரும் இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் பித்ரை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டின் முதல் நீண்ட விடுமுறையை அனுபவிக்க உள்ளனர். ஆம், வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில், ரமலான் அதன் முழு 30 நாட்களையும் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த வருடத்தின் ஈத் விடுமுறையானது ஐந்து நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளது.
இஸ்லாமிய நாட்காட்டியின் படி, ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ஈத் அல் பித்ர் கொண்டாடப்படுகிறது. எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தின் சந்திரனைப் பார்க்கும் குழு ரமலான் 29 வது நோன்பான (சனிக்கிழமை, மார்ச் 29) மார்ச் 29 அன்று பிறையைப் பார்த்தால், புனித மாதம் 29 நாட்களில் முடிவடையும் மற்றும் ஈத் விடுமுறை மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல் 1 செவ்வாய் வரை இருக்கும்.
அதாவது வார விடுமுறையான சனிக்கிழமையையும் சேர்த்து நான்கு நாள் நீண்ட விடுமுறை கிடைக்கும். இருப்பினும், மார்ச் 29 அன்று சந்திரன் காணப்படாவிட்டால், ரமலான் நோன்பானது 30 நாட்கள் நீடிக்கும். எனவே ஈத் விடுமுறையானது சனிக்கிழமை மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 புதன்கிழமை வரை என ஐந்து நாள் தொடர் விடுமுறையை அமீரக குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம்.
இப்படியான சூழலில், துபாய் வானியல் குழு குடியிருப்பாளர்களை மார்ச் 29 அன்று பாரம்பரிய நிலவை பார்க்கும் நிகழ்வில் பங்கேற்கவும், தொலைநோக்கியைப் பயன்படுத்தி மேற்கு அடிவானத்தை நோக்கிப் பார்க்குமாறும் ஊக்குவித்துள்ளது. மேலும், பிறையைக் கண்டால், உள்ளூர் அதிகாரிகளிடமோ அல்லது அதிகாரப்பூர்வ நிலவைப் பார்க்கும் குழுவிடமோ தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இது ஈத் அல் பித்ரின் தொடக்கத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும்.
எனவே, மார்ச் 29 அன்று சந்திரனைப் பார்க்கும் குழு கூடும் போது, விடுமுறையின் உண்மையான உறுதிப்படுத்தப்பட்ட தேதிகள் அறிவிக்கப்படும். ஆயினும் வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில், ஈத் அல் பித்ர் மார்ச் 31ம் தேதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறாயின் அமீரக குடியிருப்பாளர்கள் நீண்ட இடைவெளியை அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel